தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு… மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

போர் பதற்றம்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு
ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிவாயு பிரச்னை காரணமாக பல்வேறு இடங்களில் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் மையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. வணிக ரீதியான சிலிண்டர் இருப்பு இல்லாமல் பல இடங்களில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. வணிக ரீதியான சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகாரும் எழுந்துள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்யத் தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் சேவை முடங்கியுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 14) ஆலோசனை நடத்துகிறார். சமையல் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு, சிலிண்டர் தேவை ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *