ஆதவ் அர்ஜுனா பெயரில்லாமல் கண்டன அறிக்கை விட்ட எடப்பாடி!

நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜுனாவை பெயரை குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்குப் பயந்து அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்திற்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். ஆனால், அந்த அறிக்கையில் ஆதவ் அர்ஜுனா பெயரைக் குறிப்பிடவில்லை. அது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.

அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல் என்று கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனா பெயரைச் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி எதற்கு அறிக்கை வெளியிட வேண்டும். எங்கள் தலைவருக்கு எப்போதும் பயமில்லை, ஆதவ் அர்ஜுனா பெயரைச் சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் போல ரஜினிகாந்த் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *