
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கலாச்சாரத் துறை, அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய திறனாய்வு நூல்கள், கவிதை தொகுப்புகள், சுயசரிதை தொகுப்புகள் ஆகியவற்றை தேர்வு செய்து ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த நிலையி்ல, 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசின் கலாச்சாரத் துறை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 8 கவிதை தொகுப்புகள், 4 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்பு நூல்கள், 1 இலக்கிய திறனாய்வு நூல், 1 சுயசரிதை மற்றும் 2 வரலாற்றுப் பதிவு நூல்கள் ஆகியவற்றுக்கு சாகித்ய அகாடமி விருது மொழிவாரியாக அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனை விருது தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தும், மத்திய அரசின் தலையீடு காரணமாக விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

இலக்கிய திறனாய்வு பிரிவில்,ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாக ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். விருதுக்கு தேர்வான அனைவருக்கும், புதுடெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி நடைபெறும் விழாவில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கிய நிலத்தில் சாமானிய மக்களின் வாழ்வை எழுத்தாக விதைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாசிச ஆரிய எண்ணங்களுக்கு எதிராக எழுதும் எழுத்தாளருக்கு விருது வழங்குவதுதான் பொருத்தம். தாமதமானாலும் அது தற்போது நடந்துள்ளதில் மகிழ்ச்சி. தோழரின் எழுத்துப் பயணம் சிறப்புடன் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



