
காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என ஆதவ் அர்ஜுனாவுக்கு நடிகர் ரஜினி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய போது, நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்த நிலையில் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியல் பயணத்தை கைவிட்டார் என்று கூறினார். அவரின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சியினர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 17) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று கூறியுள்ளார்.



