திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்காவிட்டால்…?: பெ.சண்முகம் பரபரப்பு பேட்டி

பெ.சண்முகம்

திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கிற காரணத்தினால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதில் சிரமம் இருப்பதாக பெ.சண்முகம் கூறினார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கூடுதல் இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் கேட்டு வருகிறது.

ஏற்கெனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட இந்த முறை குறைத்து தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று திமுக கூறி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டது. ஆனாலும், தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்ட எண்ணிக்கையை விட கூடுதல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். திமுக கூட்டணியில். நிறைய கட்சிகள் உள்ள காரணத்தால் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளன. எங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்கிற கோரிக்கை சம்பந்தமாக மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்து பேசி இரவு எங்களிடம் தெரிவிப்பதாக சொல்லியியுள்ளனர்.

எனவே, மீண்டும் பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து நடைபெறும். ஒரு சுமூகமான முறையில் இந்தத் தொகுதி உடன்பாட்டை எட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் எங்கள் தரப்பிலிருந்து நாங்களும் மேற்கொள்கிறோம். திமுக தரப்பிலிருந்தும் மேற்கொள்கிறார்கள். அடுத்த கட்டப்பேச்சுவார்த்தையில் அது நிறைவு பெறும் என்கிற நம்பிக்கை என்பது எங்களுக்கு உள்ளது என்றார்.

கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்ற கேள்விக்கு,” அப்படி வரும்போது பார்த்துக்குவோம். அப்போது எங்களுடைய மாநிலக் குழு கூடி உரிய முடிவெடுக்கும். நாங்க ஒன்னும் தேர்தலைப் புறக்கணிக்கிற கட்சி இல்லை” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *