
நடிகர் பார்த்திபன்
சாதியைச் சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல என்று கூறியுள்ள நடிகர், இயக்குநர் பார்த்திபன், தனது சாதிய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழ் சினிமாவின் புதுமை விரும்பி என அழைக்கப்படுபவர் நடிகர், இயக்குநர் பார்த்திபன். இவர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (மார்ச் 19) வெளியாக உள்ளது.
சாதியை சொன்ன பார்த்திபன்
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஆந்திராவில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பார்த்திபன் பேசிய பேச்சு, பலரை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த விழாவில் பார்த்திபன் பேசுகையில், நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.” என்றார்.
தனது படங்களில் முற்போக்கு பேசும் பார்த்திபன் எப்படி தனது சாதியத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தினார் என்று சர்ச்சையானது. இதற்கு பலர் பார்த்திபனை சமூக வலைதளங்களில் கண்டித்தனர். இந்த நிலையில், தனது பேச்சுக்கு நடிகர் பார்த்திபன், சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மன்னிப்பு
அந்த பதிவில், ” சத்தியமாக சொல்கிறேன்.. எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி சாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.
அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் சாதியைச் சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்” என்று விளக்கமளித்துள்ளார்.



