பதற வைத்த விளாத்திக்குளம் மாணவி கொலை: குற்றவாளியை காட்டிக் கொடுத்த சிசிடிவி!

குற்றவாளியை கைது செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டம்.

விளாத்திக்குளத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம். விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மார்ச் 10-ம் தேதி இரவு, இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். மறுநாள் (மார்ச் 11) அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மட்டுமின்றி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் அளித்த காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனம் ஒன்று சென்றது கண்டறியப்பட்டது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அத்துடன் சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (27) என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள காற்றாலை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் சிக்கினார்.

தர்ம முனீஸ்வரன்

யார் இந்த தர்ம முனீஸ்வரன்?

காற்றாலையில் இருந்த சிசிடிவியில் தெரிந்த இருசக்கர வாகனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் திருடப்பட்டது என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாகனத்தை சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவர் உடல்களில் நகக்கீறல்கள் இருந்ததால் போலீஸார் சந்தேகப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மாணவியின் நகக்கண்களில் இருந்த சதைத் துணுக்குகளையும், தர்ம முனீஸ்வரன் உடலில் இருந்து பாகங்களை எடுத்து டிஎன்ஏ சோதனை செய்த போது அவர் தான் கொலையாளி எனத் தெரிய வந்தது.

மேலும் கடந்த 2020-ம் ஆண்டு கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற ஊரில் 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தர்ம முனீஸ்வரன் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், ஜாமீனில் வந்த போது விளாத்திக்குளம் பகுதியில் இரவு, இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *