
தர்ம முனீஸ்வரன்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் எட்டயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் மார்ச் 10-ம் தேதி இரவு காணாமல் போன பிளஸ் 2 மாணவி, அடுத்த நாள் பிற்பகல் 2 மணியளவில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்டவரை கைது செய்யும் வரை, மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படட்து. இந்த நிலையில், போலீஸாரின் சந்தேக வளையத்திற்குள் சிக்கிய ஐந்து பேரின் டிஎன்ஏ மாதிரிகளை பெற்று பரிசோதனைக்கு அனுப்பினர்.

தர்ம முனீஸ்வரன்
இந்த நிலையில், வேடநத்தம் காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், மாணவி காணாமல் போன அன்று அங்கு ஒரு இருசக்கர வாகனம் சென்றதை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த வாகனம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, அது ராமநாதபுரம் மாவட்டத்தில் திருடப்பட்டது தெரியவந்தது. அதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்திய போது, அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, 2020-ம் ஆண்டு 65 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நகையை திருடிய வழக்கில் தர்ம முனீஸ்வரன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த சூழலில், பிளஸ் 2 மாணவி இறப்பு சம்பவம் நடந்த நேரத்தில், தர்ம முனீஸ்வரனின் செல்போன் சிக்னல் அங்கு காட்டியதையும் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரை குளத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தியதுடன் ராஜபாண்டி நகரில் தர்ம முனீஸ்வரன் வசித்துவந்த வீட்டிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல்துறை வாகனத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தர்ம முனீஸ்வரனை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு உடல்நலம் குன்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



