நினைவே சங்கீதம் 4: சுவாதித் திருநாளும்,விஜய் ரமணியும்!

சுவாதித் திருநாள் திரைப்படம்.

80களில் என் கல்லூரி நாட்கள். நானும், என் நண்பன் கண்ணனும் வழக்கமான கல்லூரி மாணவர்களாக இல்லாமல் அன்றாட பாடங்களை அன்றன்றே படித்தல்,  வாரத்திற்கு இரண்டு நாள் வயலின் கிளாஸ், செவ்வாய்க்கிழமைகளில் ராகுவேளையில் துர்க்கைக்கு விளக்கேற்றும்அக்காவிற்கு துணை செல்லுதல் என்று பரம சாதுவாக இருந்தோம். நேரம் கிடைக்கும் போது கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா சொல்லும் புத்தகங்களைத் தேடுவதும் உண்டு.

அந்நியன் அம்பி

அவ்வப்போது பிரடெரிக் ஃபார்சித்திற்காக டே ஆஃப் தி ஜகால், ராபின் குக்கிற்காக கோமா, சிட்னி ஷெல்டனுக்காக தி அதர் சைட் ஆஃப் தி மிட்நைட் என்று ஆங்கில நாவல்களின் சினிமா வடிவங்களைப் பார்ப்போம்.  கா்னாடக இசை, கணையாழி, ஹிண்டு பேப்பர், ஆங்கில, தமிழ் நாவல்கள் மட்டுமே எங்கள் வாழ்க்கை.  மொத்தத்தில் இருவரும் குடுமி இல்லாத அந்நியன் அம்பி ! மரவுரி, கட்டைப் பாதுகை தரிக்காத ரிஷிகுமாரர்கள் !

ஜம்பு

ஏரியாவில் எங்களைத் ‘திருத்த வேண்டும்‘ என்று நினைத்தவர்கள் பலர். அதில் முக்கியமானவன் எங்கள் நண்பன் சம்பத். அவன் ராதா, அம்பிகாவிலிருந்து, டிஸ்கோ சாந்தி, பபிதா என்று அனைவருக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்து, அவர்களது கையெழுத்திட்ட புகைப்படம் வாங்கி விடும் பிலிம் நியூஸ் ஆனந்தன். எங்களுக்கு  ‘நல்லநல்ல‘ தமிழ்படங்களை அறிமுகம் செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தவன். அப்போது எங்கோ தொலைதூர தியேட்டர் ஒன்றில் கர்ணனின் ஜம்பு மீண்டும் வந்திருந்தது. ஜம்பு பாருங்கடா, உங்க இங்கிலீஷ் படமெல்லாம் தோத்துறும், என்று வம்படியாக எங்களைக் கூட்டிச் சென்றான். உடன் அவனது சீடர்கள் இருவர்.

தியேட்டர் முழுக்க  வாலிப வயோதிக அன்பர்கள். படத்தில் திடீரென்று  ஹொக்கேனக்கலில் வைத்து ஒரு பாட்டு சீன்.  படத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மேஜர் சுந்தர்ராஜன் ஜதி சொல்லியபடி மிருதங்கம் வாசிக்கிறார். அசோகன் சஃபாரி போட்டுக் கொண்டு முகத்தில் பலவிதமான பாவனைகளோடு ஆதி தாளம் போடுகிறார். போதாததற்கு தேங்காய் சீனிவாசன் உயிரைக் கொடுத்து புல்லாங்குழல் வாசிக்கிறார்.  கர்ணனின் கேமராவிற்காகவே பஞ்சகச்சம் போல் இடுப்பில் பரதநாட்டிய உடையும், மார்பை மறைத்து கச்சையும் கட்டிய இரண்டு பெண்கள் நாட்டியம் ஆட, சுசீலாம்மா

ஏனிந்த மயக்கம்
ஏனடி ராதா
என்ன கோபமோ?

என்று பாட எனக்குப் புல்லரிக்கிறது.

அது சுவாதித் திருநாளின்

கீதது நிகி தக தை நாத்ரு த்ரு த்ரு தாம்
நாசு ரஹே கோரி தாம் திதை தை திதை திரஹத  – கீதது நிகி தக

என்ற தனஸ்ரீ ராகத்தில் அமைந்த சுவாதித் திருநாளின் தில்லானாவின் அப்பட்டமான நகல்.ஸ்வாதித் திருநாளின் வாழ்க்கை வரலாறு மலையாள சினிமாவாக வந்த போது இந்தப் பாடல் அதில் இடம்பெற்றது.  பாட்டுக்கு நடிகை ரஞ்சனி நாட்டியமாடுவார். மதுரையில் இந்தப் படம் வந்த போது, ஸ்வாதித் திருநாளுக்காக அந்தப் படத்தை நான், கண்ணன் உட்பட 37 பேர் மட்டும்  இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறோம்.

காப்பி பாடல்

நான் கண்ணனிடம் என்னவென்று தெரிகிறதா? என்றேன். கண்ணன் ஏதோ தெரிந்தது மாதிரி இருக்கிறது என்கிறான். நான் ஏனிந்த மயக்கம் என்று பாடி, கா.. கரி ஸரி நிஸ என்று ஸ்வரம் பாடி,  கீதது நிகி தக என்று தில்லானாவின் வரியைப் பாடி, தனஸ்ரீ தில்லானாடா… விஜய் ரமணி (நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா) அப்படியே ஒத்தி எடுத்துட்டான்டா என்று சொன்னேன். அப்படியே பா… பநி .. மபஸா…. ஏனடி ராதா… என்று அடுத்த வரிக்கு விளக்கத்திற்குச் செல்லும் போது, பின்னாலிருந்து, ஒரு முரட்டுக் கை தோளில் விழுந்தது.

”தம்பி ! கச்சேரிய நிப்பாட்டிட்டு படத்தப் பாரு… நல்லா …….ய  காட்றாளுக இல்ல…“ என்று ஒரு வில்லன் குரல். திரையிசையில் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்த வேளையில், யார் இப்படி இடையில் புகுவது என்று திரும்பிப் பார்த்தேன். பின்னாளில் நான் அறிந்து கொண்ட ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம் ஜாடையில் ஒருவர் இருந்தார். அதன்பிறகு படம் முடியும் வரை நான் வாயே திறக்கவில்லை.

எனக்கு வியப்பான வியப்பு. இப்படியும்  அப்பட்டமாகக் காப்பியடிப்பார்களா?  பின்னாளில் நாதவிந்து கலாதி நமோ நமோ,    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் என்றும், சஷ்டியை நோக்கச் சரவண பவனார்,  பதினெட்டு வயசு இளமொட்டு மனசு என்றும் உல்டா ஆனதற்கு முன்னோடி இந்த ஏனிந்த மயக்கம்… பாட்டு.  சுசீலாம்மா படம்,காட்சி, நடிக்கும் நடிகைகள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், கொடுத்த பாட்டை உயிரைக் கொடுத்துப் பாடும் ஒரு உன்னதமான தொழில்பக்தி உள்ள மாபெரும் பாடகி அல்லவா? ஏனிந்த மயக்கம் என்று என்னை அப்படியே மயங்கச் செய்து விட்டார்.

பாடல் கேட்க ஆசை

அந்நாட்களில் இப்போது இருப்பது போல் யூடியூப் வசதிகள் எதுவும் இல்லையே ! எனக்கு பாடலின் முதலிரண்டு வரி மட்டும் தான் மனதில் இருக்கிறது. முழு பாடலும் கேட்க ஆசை. முழு பாடலையும் தனஸ்ரீ தில்லானாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆசை.  அன்று டேப் ரிக்கார்டர் யார் வீட்டிலும் இருக்காது. டேப் ரிக்கார்டர் இருக்கும் வீடுகளிலும் நிச்சயமாக ஜம்பு பட கேசட் இருக்கவே இருக்காது ! படத்தைத் திரும்பப் பார்ப்பது தான் அந்தப் பாடலைக் கேட்பதற்கான ஒரே வழி !

நானும், கண்ணனும் சத்தமில்லாமல் அந்தப் படத்திற்கு திரும்பவும் போயிருக்க வேண்டும்.  ஆனால், எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? நாங்கள் திரும்ப அந்தப் படத்திற்குப் போக வேண்டும் என்று முடிவு செய்த அந்த சுபயோக சுப முகூர்த்தத்தில் வினைக்கென்று சம்பத் எதிரே வந்தான். என்னையறியாமல், “ஜம்பு படம் இன்னும் ஓடுதா? தூக்கிட்டாங்களா?“ என்று கேட்கும் போதே கேட்டது மாபெரும் தவறு என்று தெரிந்து விட்டது.

சம்பத்“உங்கள மாதிரி சாமியார் பையலுக புத்தி எங்களுக்கு தெரியுண்டா.. பெரிய ….. மாதிரி இங்கிலீஸ் படம்பீங்க.. சங்கீதம்பீங்க..  கர்ணன் படத்தப் பாத்து இப்படி மயங்கிட்டீங்களேடா…  நீயெல்லாம் எங்க பாட்டன் சொத்து பாத்துருக்கணும்… உங்கள எல்லாம் ரொம்ப அப்புராணின்னு நெனச்சேன்… நல்லா வேஷம் போட்றீங்கடா…“ என்று என்னென்னமோ கத்தி ரகளை செய்து விட்டான்.

நான் அதோடு விட்டிருக்க வேண்டும்.  அவன் வாயை அடைப்பதாக நினைத்துக் கொண்டு “இல்லடா, அதுல  ஏனிந்த மயக்கம்னு ஒரு பாட்டு.. தனஸ்ரீ ராக தில்லானாவ உல்டா பண்ணிருக்காண்டா.. அத பாக்கத்தான்..” என்றதும் அவனுக்கு வெறி ஜாஸ்தி ஆகிவிட்டது.

“டேய், எங்களுக்கெல்லாம் ஒரு வயசுலேயே காது குத்திட்டாங்கே… ” என்று காதைக் காட்டுகிறான்.  “ஜெயமாலாவ பாக்கணும்னு உண்மைய ஒத்துக்கிட்டா கூட பரவாயில்ல.. நா விட்ருவேன்.. என்னவோ, ராகம் எல்லாம் சொன்னா, நாங்க ஏமாந்துருவோமா?“ என்று பேசிக் கொண்டே போகிறான். டேய்.. கத்தாதடா,. விட்றா.. விட்றா…” என்று நான் கெஞ்சுகிறேன்.

என் போன்ற அப்பிராணி அம்பிகள் பேசும் உண்மையை உலகம்  எந்தக் காலத்திலும் நம்பியதில்லையே !
ச.சுப்பாராவ் ( தொடரும்)

1)https://maduraiseithi.in/s-subbarao-writes-ninaive-sangeetham1/ 2)https://maduraiseithi.in/ninine-sangeetham-2-written-by-s-subbarao/
3)https://maduraiseithi.in/s-subbarao-written-by-ninaive-sangeetham-3/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *