திமுக, விசிக ஒப்பந்தம் கையெழுத்தானது… 8 தொதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் ஒடுக்கீடு செய்யப்பட்டு கையெழுத்தானது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கூட்டணிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையாமல் இழுத்தடிப்பு நடந்து கொண்டிருந்தது.

தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக தரப்புக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. குறிப்பாக, திமுகவுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதி கேட்பதால் இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே, நேற்று நடைபெற்ற விசிக உயர்நிலை கூட்டத்திலும், வரும் சட்டப் பேரவை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் திமுகவிடம் தொகுதிகளை கேட்டு பெறவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று( மார்ச் 24) சந்தித்துப் பேசினார். இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது. இதில் 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2 மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கும் தேமுதிக மற்றும் மநீம உடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *