
நயினார் நாகேந்திரன்.
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது, நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை ரூ. 4 கோடி பணத்தைக் கைப்பற்றியது. இந்த பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக மூல வழக்குப் பதிவு செய்தும், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவது கட்டாயமானது என்பதால், வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், நயினார் நாகேந்திரனும், கேசவ விநாயகமும் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த மனுவில் குற்றம் சாபட்டப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நயினார் நாகேந்திரன் மீதான இந்த மனு மீது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி கிரிராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



