
கு.ப.ரா
தமிழ்ச்சிறுகதைகளின் தனித்த மொழிதல் எழுத்தாளர் கு.ப.ரா வினுடையது.அவரும் அவருடைய இலக்கிய நண்பர்களான தி.ஜானகிராமனும்,கரிச்சான் குஞ்சும் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்புகள் விரிந்த தன்மையிலானவை. காவிரியின் கரையில் படர்ந்திருக்கும் கும்பகோணத்துக்காரர்கள் இவர்கள். எழுதுகிறவர்கள் எல்லோரும் அவர்களுடைய நிலத்தையும் அதில் உறைந்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளையும் தானே கதைகளாக எழுதுகிறார்கள். கும்பகோணத்தில் 1900-ம் ஆண்டுகளில் வாழ்ந்திருந்த அக்ரஹாரத்து வாழ்க்கையைத்தான் இவர்கள் எல்லோரும் இலக்கியமாக்கினார்கள்.இவர்கள் மட்டுமல்ல,பள்ளிக்கல்வியை எட்டித் தொட்டிருந்த சமூகமாக பிராமண சமூகமே இருந்தது. எனவே அவர்கள எழுதிய கதைகள் யாவும் அந்த எல்லைக்கோட்டை கடக்கவில்லை. இது தனித்துப் பேச வேண்டிய இலக்கிய அரசியல்.
கு.ப.ராஜகோபாலன்
எழுத்தாளர் கு.ப.ரா. தஞ்சை எழுத்துக்கலைஞர்களில் தனித்தவர். தான் எழுதிய கதைகளுக்காக தன்னுடைய சமூகத்தாராலயே கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் அவர். அவருடைய கதைகள் யாவும் பாலியல் பிறழ்வுகளைப் பற்றியே பேசுகிறது எனும் குற்றச்சாட்டுக்கும் ஆளானவர் அவர். காலம்தான் காயங்களை ஆற்றும். பெண் உலகின் மன நூதனங்களை எழுத்தாக்கிய தமிழின் முதல் எழுத்தாளர் கு.ப.ரா என்பது இன்றைக்கு இலக்கிய விமர்கர்கள், வாசகர்களால் ஏற்கப்பட்டிருக்கிறது.
அவருடைய கதைகளின் சொற்கள் ததும்பும் பெண் மனதின் சொற்களால் கட்டித்தரப்பட்டவை. அவருடைய சிறிது வெளிச்சம் மாதிரியான கதையை இன்றைக்கு கதை எழுதுகிறவர்களால்கூட எழுதிட முடியாது. அது 1940-ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கதை. முழுக்க பெண் மன உலகின் ஆற்றாமைகளை,அவர்களின் உடல்சார் வலிகளை, ஆண் மன வக்கிர விகாரங்களை துணிந்து கதையாக்கியவர் கு.ப.ரா. எழுதுகிற எல்லோருக்கும் இந்த கதைகளை ஏன் எழுதித் தொலைக்கிறோம். இதை எழுதாவிட்டால் என்ன நடந்துவிடப்போகிறது எனும் கேள்விகள் இன்றுவரையிலும் எழுந்து கொண்டேயிருக்கிறது. அன்றே அது குறித்து விரிவாக விவாதித்தது மட்டுமல்ல, ஏன் எழுதுகிறேன் என்பதையே சிறுகதைகளாக உருமாற்றியவர் கு.ப.ரா. பத்திற்கும் மேலான கதைகள் எழுத்தைப்பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவருடைய புரியும் கதை,ஸ்டுடியோ கதைகள், சிறுகதை இயந்திரம் போன்ற கதைகள் அதற்கான வலுவான சாட்சியங்கள்.

விடியுமா?
எல்லாவற்றையும் கடந்து கு.ப.ராவின் கதைகள் பேசுவது பெண் மன உலகின் அவஸ்தைகளையும், துயரங்களையும் பற்றியதுதான். அதில் விடியுமா? எனும் கதை மிகவும் தனித்தது.விடியுமா? அதன் சொல்முறையால் உலகின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இன்றைக்கும் நீடித்திருக்கிறது. கதைக்குள் வருகிற கதை சொல்லி தன்னுடைய தமக்கையின் மன உலகில் என்னவெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கும் என்பதை கண்டறிய முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார். அதுவே கதை. ஒரு ரயில் பயணத்திற்கான தேவை. அதன்பிறகான ரயில் பயணம். கதையின் இறுதியில் ரயில் பயணம் நிறைவு. எப்படியும் ரயில் பெருநகரத்தினைத் தொடும்போது பொழுது விடிந்திருக்கும். அது இயற்கையின் இயல்பான விளையாட்டு. ஆனால் என் தமக்கையின் வாழ்வினை இந்த விடியல் பொழுது கலைத்துப் போடுமா? அல்லது விடியலைக் கொண்டுவருமா? எனும் பரிதவிப்பே விடியுமா? எனும் கதையின் கட்டமைப்பு. தமிழில் சிறுகதை எழுத நினைக்கிறவர்களுக்கான இலக்கணம் விடியுமா? எனும் கதைக்குள் பொதிந்திருக்கிறது.

கு.ப.ரா
ஒரு கதையை எங்கிருந்து தொடங்க வேண்டும். தொடங்கிய கதையை எப்படி நடத்த வேண்டும் . கதையின் நிறைவில் வாசகர்களுக்கான தனித்த இடத்தை எப்படி உருவாக்கித்தர வேண்டும் என்பதற்கான கட்சிதமான சாட்சியே விடியுமா? எனும் கு.ப.ராவின் சிறுகதை.
தந்தி
கதையின் துவக்கத்தில் தந்தி ஒன்று வருகிறது. “சிவராமய்யர் –டேஞ்சர்ஸ்” எனும் இரண்டு சொற்கள் மட்டுமே இருக்கிறது. அது நிஜம்தானா? எனும் கேள்வி சுற்றியிருக்கும் உறவினர்கள் மத்தியில் ஏற்படுகிறது. அது உண்மையாக இருக்காது. இருக்கக்கூடாது என நினைப்பவராக அவருடைய மனைவி குஞ்சம்மாள் இருந்தார். ஆளாளுக்கு அவரவருடைய தரப்பு நியாயங்களைப் பேசத் துவங்கினர். தந்தி உண்மையாகத்தான் இருக்கும். அப்படியெல்லாம் இருக்காது எனும் தர்க்கங்களும், வியாக்கியானங்களும் நடக்கிறது. இது எல்லாவற்றையும் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவரே கண்டறிய முயற்சிக்கிறார். இருக்கும் என நினைப்பதற்கான காரணம் எது?
தந்தியை அடித்திருப்பவர் தனிநபரல்ல. அரசாங்க ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்கிறது. எனவே நிச்சயம் அபாயக்கட்டத்தில்தான் இருப்பார் என்று நினைக்கிறார்கள். குஞ்சம்மாள் நினைவிற்குள் “நான் அம்மா வீட்டிற்கு கிளம்பி வரும்போது நன்றாகத்தானே இருந்தார். நான் இப்பிடி கிளம்பி வந்தது அவருக்கு பிடிக்கவில்லை போல அதான் இப்படி ஒரு தந்தியை அவரே அடித்திருக்கிறார்” என மனதிற்குள் யோசிக்கிறாள். இது எல்லாவற்றையும் கதை சொல்லி கவனிப்பதின் வழியே கதை நகர்கிறது.
ரயில் பயணம்
ரயில் பயணத்திற்கும் தன்னுடைய தமக்கையான குஞ்சம்மாளை அழைத்துக்கொண்டு கதை சொல்லி கிளம்புகிறார். கிளம்புவதற்கு முன் எத்தனை மனக்கிலேசங்கள் அவரவர் மனதிற்குள் நிகழ்கிறது என்பதை வரி வரியாக வாசகனுக்குள் கடத்துகிறார்.கு.ப.ரா. சாஸ்திரி சோஸ்யம் பார்க்கிறார். “கொஞ்சம் கெட்ட காலம்,மற்றபடி ஒன்னுமில்லை என்று தைரியமூட்டுகிறார். அம்மா ஊரில் இருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைக்கிறார். சகுனம் பார்த்து வழி அனுப்பி வைக்கிறார். எல்லாவற்றையும் செய்து கொண்டேயிருக்கும் குஞ்சம்மாளின் முகம் தடுமாறிக் கிடப்பதை கதை சொல்லி சொல்லாமல் சொல்கிறார். ரயில் பயணம் துவங்கிவிட்டது.
பயணத்தின்போது மனம் அடையும் விசித்திரமான மாற்றங்களை மிக நுட்பமாக பதிவு செய்த கதை விடியுமா?.ரயிலுக்குள்ளும் மறுபடியும் உறவினர்கள் இருக்கும், இருக்காது எனும் தர்க்கத்திற்குள் இறங்கி விடுகின்றனர். “குஞ்சம்மாள் எல்லோருக்கும் சொல்வதைப் போல தனக்கும் தான் சொல்லிக் கொள்கிறாள்.” பாரேன் ரயில்வே ஸ்டேசன் போய் வண்டி நிற்கிற போது நிச்சயம் அவர் என்னை வரவேற்க காத்திருப்பார்.”இந்த எல்லா உணர்வுகளையும் எழுத்தாளர் இரண்டு வரிகளில் கடத்திவிடுகிறார்.
ஒரு கதையின் மையத்தை இரண்டே வரிகளில் கட்டமைத்துவிடும் பேராற்றல் மிக்கவர் கு.ப.ரா. இதனை அவருடைய எல்லாக் கதைகளிலும் காண முடியும். “ எது எப்படியாயினும் மனசை சில மணி நேரங்களாவது ஏமாற்றி அதன் தத்தளிப்பைக் குறைத்துக் கொள்ளவே இங்கு எல்லோரும் விரும்புகிறோம். மனதின் ஆழத்தில் பீதி புழுவைப் போல துளைத்துக் கொண்டேயிருக்கிறது. சுகமோ, துக்கமோ அது சில மணித்துளிகள்கூட நீடித்திருக்காது என்பதற்கு இந்த ரயில் பயண உணர்வுகளே சாட்சி. மனித மனம் துக்கத்திலிருந்து வெளியேறும் வழிகளுக்காகத்தான் நொடி நொடியாக காத்திருக்கிறது. ரயில் பயணத்தில் எல்லாம்தானே நடக்கும். பயணிகள் தூங்கி வழிவார்கள். ரயில் நிற்கும் நிறுத்தங்களில் எல்லாம் யாரோ ஒருவர் “இது என்ன ஸ்டேசன் என்று கட்டாயம் கேட்பார்கள். இது எல்லாம் கதையில் நடக்கிறது. இதை மட்டும் எழுதியிருந்தால் விடியுமா/ மிக சாதாரண கதையாகியிருக்கும். ஆனால் கு.ப.ரா. கதைக்குள் செய்தது வேறு ஒரு மேஜிக். தன்னுடைய தமக்கையை கவனிக்கிறார் எழுத்தாளர். அதையே சொல் கொண்டு வாசகனுக்குள் கடத்துகிறார்.

குஞ்சம்மாவின் வாழ்க்கை
இன்னைக்குன்னு ஏன் இப்படி சௌந்தர்யம் கொட்டுகிறது இவள் முத்தில். எல்லோருடனும் சிரித்துப் பேசி தன்னை மறந்து பயணித்துக் கொண்டிருக்கிறாளே? இவளுடைய மகிழ்வு நீடிக்குமா? அல்லது விடிய ரயில் வண்டி சென்னையை அடையும்போது எல்லாமே முடிந்துவிடுமா? இப்படி யோசித்து யோசித்து அந்த யோசனைகளின் பின்னாலே நம்மையும் அலைய வைக்கிறார் எழுத்தாளர். கதையின் போக்கிலேயே வாசகனுக்கு புரிந்துவிடுகிறது. காலையில் பொழுது விடியும். குஞ்சம்மாவின் வாழ்க்கை விடியுமா? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி. ரயில் ஸ்டேசனுக்குள் நுழைகிறபோது சூரியனும் நுழைந்து விட்டான். பொழுதும் விடிந்து விட்டது.
ஆனால் குஞ்சம்மாள் நம்பிக்கொண்டிருந்ததைப் போல அவளுடைய கணவன் அவளை எதிர்பார்த்து ஸ்டேசனில் காத்திருக்கவில்லை…கதை ஆஸ்பத்திரியை நோக்கிப் போகிறது…
நூற்றுக்கும் அதிகமான கதைகளை எழுதியிருக்கும் குப.ராவின் எல்லாக் கதைகளும் தத்தளிக்கும் பெண் மனதின் துக்கங்களையே கதைகளாகக் கட்டித்தந்துள்ளன. அவர் வாழ்ந்த காலத்தில் பாலியல் கிளர்ச்சிக் கதைகளை எழுதுகிறவர் என குற்றம் சாட்டப்பட்டவர் கு.ப.ரா. அதைப் புறந்தள்ளி பெண் உடலின் வாதைகளை துணிச்சலுடன் தன் கதைகளின் வழியாக முன் வைத்துக்கொண்டேயிருந்தார். கு.ப.ரா. வாசகர்களின் எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர். உடல் அரசியலும், உடல்களின் மீது அதிகாரம் நிகழ்த்திக் கொண்டேயிருக்கும் அதன் அரசியலையும் இரண்டாயிரத்திற்குப் பிறகான சிறுகதை எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஆதிவிதை கு.ப.ரா என அறியப்பட்டிருக்கும் கு.ப.ராஜகோபாலன்.
-ம,மணிமாறன் (தொடரும்)
1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/
2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/



