
அடி எதுகை
தற்பொழுது நாம் எதுகை குறித்துப் பார்த்து வருகிறோம். மோனையைப் போலவே எதுகையிலும் ‘அடி எதுகை’ என்றும் ‘சீர் எதுகை’ என்றும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஓரடியிலுள்ள முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடியிலுள்ள முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருவது அடி எதுகையாகும்.
(எ-கா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
(மூதுரை- ஔவையார்)
மேற்கண்ட வெண்பாவில் ஒவ்வொரு அடியிலும் இருக்கும் முதற்சீரின் இரண்டாம் எழுத்துகள் ஒன்றி வந்திருப்பதைக் காண்க!
அதோஅந்தப் பறவைபோல வாழவேண்டும்
இதோயிந்த அலைகள்போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரேகீதம் உரிமைகீதம் பாடுவோம்!
(கவியரசு கண்ணதாசன்)
மேற்கண்ட பாடலில் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓரெதுகை வந்திருப்பதை அறியலாம். முதல் இரண்டடிகளில் உள்ள முதற்சீர்களின் இரண்டாது இடங்களில் ‘தோ’ என்ற எழுத்து எதுகையாக வந்திருப்பதையும் அடுத்த இரண்டடிகளின் அதே இடங்களி ‘ரே’ என்ற எழுத்து மோனையாக வந்திருப்பதையும் காணலாம்.
சீர் எதுகை
ஒரே அடியில் உள்ள சீர்களில் முதல் எழுத்து அளவொத்து வந்து இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தால் அதைச் சீர் எதுகை என அழைக்கிறோம்.
(எ-கா)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லற மல்லது நல்லற மன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
(கொன்றை வேந்தன்– ஔவையார்)
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள்சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாகுமா?
சுவைல்லாம் இதழ்சிந்தும் சுவையாகுமா?
(கவியரசு கண்ணதாசன்)
மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் மூன்றாம் சீரின் இரண்டாம் எழுத்தும் ஒன்றி வந்திருப்பதைப் பாருங்கள்!
எதுகைகள் அவை அமையும் தன்மையை வைத்து தலையாகு எதுகை என்றும் இடையாகு எதுகை என்றும் கடையாகு எதுகை என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகம் பார்ப்போம்!
தலையாகு எதுகை
ஒவ்வொரு அடியிலும் முதற்சீரிலுள்ள எழுத்துகளில் முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் அனைத்தும் ஒன்றி வந்தால் அது தலையாகு எதுகை எனப்படும். அனைத்து எழுத்துகளும் ஒன்றி வந்தாலும் அது தலையாகு எதுகைதான்.
(எ-கா)
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணெண்ப வாழும் உயிர்க்கு
(திருக்குறள்- 392)
அத்திக்காய்க் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே!
இத்திக்காய்க் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
(கவியரசு கண்ணதாசன்)
மேற்கண்ட இரண்டு பாட.களிலும் முதலடியிலும் இரண்டாம் அடியிலும் உள்ள முதற்சீர்களில் முதல் எழுத்துகள் மட்டும் வேறுபட்டு நிற்க, மற்ற எழுத்துகள் அனைத்தும் ஒன்றி வந்துள்ளன. எனவே இவை தலையாகு எதுகைகள் ஆகும்.
இடையாகு எதுகை
ஒரு பாட்டின் முதல் அடியில் உள்ள முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் அடுத்த அடியில் உள்ள முதற்சீரின் இரண்டாம் எழுத்தும் (மட்டும்) ஒன்றி வருவது இடையாகு எதுகை எனப்படும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் முதலெழுத்துகள் அளவொத்து வரவேண்டும். அதாவது எதுகைக்கு முன்னிருக்கும் முதலெழுத்து முதலடியில் குறிலாக வந்திருந்தால் இரண்டாவது அடியிலும் குறிலாக வரவேண்டும்; நெடிலாக வந்திருந்தால் இரண்டாம் அடியிலும் நெடிலாகவே வரவேண்டும். பெரும்பாலான பாடல்களில் பயன்படுத்தப்படும் எதுகை இந்த இடையாகு எதுகையேயாகும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(திருக்குறள்- 1)
பனியில்லாத மார்கழியா? படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா? இசையில்லாத முத்தமிழா?
(கவியரசு கண்ணதாசன்)
மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் முதல் எழுத்துகள் அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்துகள் எதுகை பெற்று வந்துள்ளன.
கடையாகு எதுகை
கடையாகு எதுகை பலவகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
வருக்க எதுகை: தமிழ் எழுத்து அட்டவணையில் இருக்கும் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ஆகிய பன்னிரண்டு எழுத்துகளும் ஒன்றுக்கொன்று மோனையாக வரும். மற்ற எழுத்துகளும் இதுபோன்றே வரும். என்றபோதிலும் குறிலுக்குக் குறிலும் நெடிலுக்கு நெடிலும் வருவது சிறப்பு.
(எ- கா)
பிறவிப் பெங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
(திருக்குறள்- 10)
இக்குறளில் றகரத்திற்கு றைகாரம் எதுகையாக வந்துள்ளது.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே
(கம்பராமாயணம் – கடவுள் வாழ்த்து)
இப்பாட்டில் லகரமும் லைகாரமும் மாறிமாறி எதுகையாக வந்துள்ளதைக் காண்க!
நெடில் எதுகை: மொத்தம் உள்ள நெடில் எழுத்துகள் 126. அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று எதுகையாக வரும்.
(எ- கா)
ஆவா எனவேங்கி அல்லாந்து சோகாத்து
பாகா யுருகிப் படர்ந்தார் சிலமாதம்
இதில் இரண்டாம் எழுத்துக்கள் நெடிலாக அமைந்துள்ளபடியால் இது நெடில் எதுகையாகிற்று.
குறில் எதுகை: தமிழில் உள்ள 90 குறில் எழுத்துக்களும் தம்முள் ஒன்றுக்கொன்று எதுகையாக அமையும்.
(எ- கா)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
(திருக்குறள்-64)
இந்தக்குறளில் மி என்ற குறிலுக்கு று என்ற குறில் எதுகையாக அமைந்துள்ளது.
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
(வாலி)
இந்தப் பாட்டில் ட என்ற குறிலுக்கு ளி என்ற குறில் எதுகையாக வந்துள்ளது.
உயிர் எதுகை: உயிர்மெய் எழுத்துக்களில் இருக்கும் உயிரெழுத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு எதுகை அமைத்தல் உயிர் எதுகையாகும்.
(எ- கா)
நீரின் றமாயா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுகை
(திருக்குறள்- 20)
இந்தப் பாடலில் ரி(ர்+இ)யில் இருக்கும் இ யையும் னி(ன்+இ)யில் இருக்கும் இ யையும் எதுகையாகக் கொள்ள வேண்டும்.
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ?
காரிகையின் உள்ளம் காண வருவாரோ?
(கவியரசு கண்ணதாசன்)
இந்தப் பாட்டிலும் எதுகையாக இ என்ற உயிரெழுத்தே வந்துள்ளதைக் கண்டுணர்க! ( ற்+இ=றி) (ர்+இ=ரி)
வல்லின எதுகை: க் ச் ட் த் ப் ற் என்ற வல்லின மெய்கள் ஒன்றுக்கொன்று
எதுகையாக வரும்.
(எ- கா)
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தால் காணப் படும்
(திருக்குறள் -114)
சட்டி சுட்டதடா கை விட்டதடா!
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா!
மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் வல்லின மெய்கள் (க் – ச்) (ட் – த்) எதுகையாக அமைந்துள்ளன.
மெல்லின எதுகை: ங் ஞ் ண். ந்.ம் ன் என்ற மெல்லின மெய்கள் ஒன்றுக்கொன்று எதுகையாக வருவதை மெல்லின எதுகை என்று அழைக்கிறோம்.
அன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு
(திருக்குறள்-74)
இதில் மெல்லின மெய்களான ன் மற்றும் ண் என்பவை எதுகையாக வந்துள்ளன.
இடையின எதுகை: ய் ர் ல் வ் ழ் ள் என்ற இடையின மெய்யெழுத்துக்கள் தம்முள் எதுகை பெறும். இதை இடையின எதுகை என்பர்.
எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
(திருக்குறள்- 299)
இதில் ல் மற்றும் ய் என்ற இடையின மெய்யெழுத்துக்கள் தம்முள் எதுகையாக வந்துள்ளன.
மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை:
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
(திருக்குறள்-292)
இங்கு மூன்றாம் எழுத்து(மை) எதுகையாக வந்துள்ளது.
ஆசிடை இட்ட எதுகை: ய் ர் ல் ழ் ஆகிய எழுத்துகள் முதல் எழுத்திற்கும் இரண்டாவது எழுத்திற்கும் இடையில் ஆசாக (பற்றுக் கோடாக) வரும்.
வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொல்
(திருக்குறள்- 291)
இதில் ய் ஆசாய் வந்துள்ளது.
மாக்கொடி மாணையும் மௌவற் பந்தலும்
கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை
இதில் ர் ஆசாய் வந்திருக்கிறது.
ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்.
இதில் ல் ஆசாய் வந்திருக்கிறது.
வாழ்கின்றோம் என்று மகிழன்மின் வாழ்நாளும்
போகின்ற பூளையே போன்று
இதில் ழ் ஆசாய் வந்துள்ளது.
இன்னும் அளபெடை எதுகை, ஒரூஉ எதுகை, முரண் எதுகை, வண்ண எதுகை, இடையிட்ட எதுகை, இரண்டடி எதுகை என்று சில எதுகைகளும் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை தற்காலத்திற்குப் பொருத்தமற்றவை.
எதுகைத் தொடை இத்துடன் முடிகிறது. எஞ்சியிருக்கு தொடைகள் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்!
-மனோந்திரா (தொடரும்)
1)https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/



