ஒரு கதை 6: கண்ணீரில் கரையுமா துயரம்…

என்னுடைய இளம் பிராயத்தில் எங்களுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவலாயத்திற்கு அடிக்கடி செல்வேன். அது ஒரு கத்தோலிக்க தேவாலாயம். பத்து பைசாவிற்கு சக்கரை வாங்கிக் கொண்டு போய் அங்கு படையிலிடுவது இறை வேண்டலின் ஒரு பகுதி. அப்படி நான் பல பரீட்சை நாட்களில் கேள்வித்தாள் எளிமையாக வரவேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்தி ஏற்றி சர்க்கரை படையலிட்டு திரும்புவேன். இதுவெல்லாம் என்னுடைய ஆறு அல்லது ஏழாம் வகுப்பு காலமாக இருக்கலாம். .

அப்போது என்னுடைய வகுப்பு ஆசிரியராக இருந்த ஜான் ஆசீர்வாதம் சார் வகுப்பில் நன்னெறி பாடவேளையில் பைபிள் கதைகளையே சொல்வார். ஒருவேளை அதுவும்கூட பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணமிட்டு தேங்காய் விடலை போட. வேண்டிய நான் தேவாலாயம் நோக்கி போனதிற்கு, ஒரு வேளை காரணமாக இருக்கலாம். தேவாலாயத்தில் முழந்தாழிட்டு ஜெபிக்கும் மனிதர்கள் ஏன் இப்படி கண்ணீர் உகித்துக் கிடக்கிறார்கள் என அந்த வயதில் எனக்குப் புரியவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு நான் வாசித்த நூல்களே என்னை நெறிப்படுத்தியது. மதம் ஒரு அபின் என்ற சொற்றொடரை மட்டும் கேட்டுப் பழகியிருந்த எனக்குள் மாற்றம் விளைவித்தது மார்க்ஸ் தான்.

கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்காக இருக்கிறது மதம் என கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸின் சொற்களை வாசித்தேன். அந்த நாளின் நீண்ட இரவில் எனக்கு வந்த கனவினில் லட்சக்கணக்கில் முழந்தாழிட்டு அழுகிற பெரும் கூட்டம் என்னை அச்சுறுத்தியது. மதம் ஒரு அபின் எனும் சொற்றொடரின் ஆழமான அர்த்தம் புரிந்த பிறகே இப்போதிருக்கும் நான் உருவானேன். பின்னாளில் முரட்டு நாத்திகனாக இருந்த என்னை, பக்திப்பரவசம் கொண்டிருப்போரை கேலி பேசிக் கொண்டிருந்த என்னை விரிவாக யோசி எனச் சொன்னது அந்தப் புத்தகம்தான். இந்த சரணாகதி மனநிலைக்குப் பின் உள்ள உளவியல் என்னவாக இருக்கும் என யோசித்திருக்கிறேன்.

நம்பிக்கை பிடி கயிறுகள் இற்று விழுந்து கொண்டிருக்கும் இந்த குரூர வாழ்வினை நகற்றி மேலேறிட அவர்களுக்கு மத நம்பிக்கை ஒரு பிடி கயிறாக இருக்கிறது. புரிந்து கொண்ட பிறகு இயல்பாக அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள். இதில் எனக்கு துளியும் குழப்பமில்லை. எப்போதாவது அந்த தேவாலயத்தைக் கடக்கும்போது நின்று பார்ப்பேன். அப்படித்தான் சில நாட்களுக்கு முன் பார்த்த போது ஒரு கன்னியாஸ்திரி முழந்தாழிட்டு அழுது கொண்டிருந்தார். அந்தக் காட்சி இதுவரை நான் பார்த்திராதது. மொத்த வாழ்க்கையையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்துவிட்ட பிறகு தனித்த கோரிக்கை என்ன இருக்க முடியும் அந்த கன்னியாஸ்திரிக்கு எனும் சிந்தனை எனக்குள் ஓடியது. தூய வெள்ளை அங்கியில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்

அந்த இளம் கன்னியாஸ்திரியை நான் வாசித்த கதை ஒன்றில் பார்த்திருக்கிறேன் என்று என்னுடைய மனம் சொன்னது. வீட்டிற்கு வந்து என்னுடைய புத்தக அலமாரியைக் கலைத்து அந்த புத்தகத்தை எடுத்தேன். அது இந்த வருடம் (2026) வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. அதற்குள் நான் அந்தக் கன்னியாஸ்திரியைத் தேடினேன். அவர் ப்ரிம்யா கிராஸ்வின் எழுதி வெளிவந்திருக்கும் திருப்பண்டம் எனும் சிறுகதைத் தொகுப்பின் கடைசிக்கதையான சம்மனசு கதைக்குள் இருந்தார். அதனையே ஒரு கதை என நான் எழுதிக்கொண்டிருக்கும் தொடரின் வாசகர்களோடு பேசலாம் என நினைக்கிறேன். .

சம்மனசு கதை நிகழுமிடம் ஒரு கடற்கரை கிராமம். செலின் எனும் இளம் கன்னியாஸ்திரியே சம்மனசு எனும் கதையைச் சொல்கிறாள். அது அவளின் கதைதான். அவளோடு பள்ளிக்கூட சேக்காளியாக இருந்த சிசிலியுடன்தான் பேசுகிறாள். அவள் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள். அவள் செலினின் கடந்த கால வாழ்வினை அவளுக்கு ஞாபகமூட்டி கடந்து போகிறாள். சிசிலி செலினைக் கடக்கும்போது அவளுடைய முகத்தில் நிறைந்திருந்த மஞ்சள் இவளுடைய வெண்மை பளீரிடும் அந்த கன்னியாஸ்திரி ஆடையில் படிந்து விடுகிறது. அது கறையா அல்லது வேறு எதுவுமா எனத்தடுமாறுகிறாள். அவளுடைய ரகசியமான கடந்த காலத்திற்குள் பயணமாகிறாள். நிஜத்தில் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சிசிலிதான் கன்னியாஸ்திரியாகப் போகிறேன் என திருச்சபையில் பெயர் கொடுத்தவள். ஆனால் அவள் கல்யாணம் கட்டிக்கொண்டு போய்விட்டாள். செலின் விரும்பி கன்னியாஸ்திரி ஆகினாளா அல்லது அவளுடைய உடலுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தைக் காப்பாற்றிட கன்னியாஸ்திரி ஆகினாளா எனும் தடுமாற்றம் அவளை இன்றும் இம்சிக்கிறது.

அவளுடைய அம்மாவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை பள்ளிக்கூடத்தில் செலினுடன் பிரியமாக இருந்த பயிற்சி ஆசிரியையிடம் சொல்கிறாள். “டீச்சர் நான் கன்னியாஸ்திரி ஆகப் போறேன்.”

“அதுக்கென்னடி நல்லா ஆகலாம். ஒருதடவைக்கு நாலு தடவை யோசிச்சுக்கோ”என்கிறாள் டீச்சர்.

நெருங்கிய சிநேகிதி போல பழகிடும் டீச்சரிடம் உண்மையைச் சொல்லி விடுகிறாள். அவளுடைய தாயும்,அவளும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த ரகசியத்தை டீச்சர் அச்சத்துடன் எதிர்கொள்கிறாள். “டீச்சர் நான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லனும். எனக்கு வயது பதினெட்டத் தொடாப்போகுது நானு இதுநாள் வரையிலும் பெரிய மனுஷியாகல.கருப்பை வளர்ச்சியடையததால நான் ஒருநாளும் பெரிய மனுஷி ஆக மாட்டேனாம்” டீச்சரிடம் கண்ணீர் சிந்தியபடி மருத்துவ ரிப்போர்ட்டையும் காட்டுகிறாள் செலின். “என்னடி சொல்ற, நீ பெரிய மனுஷியாயிட்டேன்னு உங்க அம்மா சடங்கெல்லாம் சுத்துனாங்களே.”..அது எங்களை நாங்களே ஏமாத்திக்கிட்டது மட்டுமில்ல. ஊரையும் சேர்த்து ஏமாத்தினதுதான். இப்ப சொல்லுங்க நான் கன்னியாஸ்திரி ஆகலாமா, அது பாவமில்லையா?. தைரியமா நீ கன்னியாஸ்திரி ஆகு. பொண்ணுன்னா என்ன பீள்ளை பெத்துக்கிடுறது மட்டுந்தான்,அப்பிடிங்கிறத மொதல்ல மாத்தனுன்டி..

ஒரு கதையின் மையப்புள்ளியை இரண்டு வரிகளில் கொண்டுவந்து சேர்த்திடும் நுட்பம் இப்போது எழுத வந்திருக்கும் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள் பலருக்கும் வாய்த்திருக்கிறது.. “ விதிக்கப்பட்ட வாழ்வுல என்னடா இருக்கு. நீ ஒரு பாதைய உருவாக்கு. யாருக்குத் தெரியும். அதுல நடக்கப் போற லட்சம் காலடிகள்ல உன் சுவடுகள் முதலாவதாக இருக்கலாம் ”

“இயேசப்பா போலவா டீச்சர்.அவரு சிலுவையில உதிரம் பெருக்கினாரு. நான் உதிரம் பெருக்காததால சிலுவையில அறையப்படப்போறேன். அப்படித்தானே டீச்சர்.!”

மனிதர்கள் எப்போதும் மதங்களைக் கடந்து மனதிற்குள் அச்சப்பட்டுக் கிடப்பவர்கள். தான் போகிற பாதை, தேர்வு செய்த பாதை சரிதானா? எனும் அச்சம் நிச்சயம் அவர்களை இம்சிக்கவே செய்யும். எல்லாவற்றையும் கடந்து செலினுக்குள் ஒரு பதற்றம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அவள் கடற்கரை கிராமத்தில் கன்னியாஸ்திரி உடையில் காலாற நடக்கும் போது அந்த உடையே அவளுக்கு பெரும் பாராமாக இருக்கிறது. அதிலும் சிசிலி கடந்து போகிற போது உச்சரித்துப் போன பெயர் அவளை வாட்டி எடுக்கிறது.

ரூபன். அந்த ஊரின் வசதியான வீட்டுப் பையன். செலினின் பள்ளிக்கூட நாட்களில் அவளோடு அன்பாகப் பழகியவன். செலின் கன்னியாஸ்திரி ஆனதற்கும் ருபன் மனம்பிசகி பாறை மேட்டில் உட்கார்ந்து கடலை வெறித்துக் கொண்டிருப்பதற்கும் எதுவாயினும் தொடர்பு இருக்குமோ என அவளுடைய மனம் தத்தளிக்கிறது. அவனைத் தேடி கடற்கரைக்குப் போகிறாள் கன்னியாஸ்திரியான செலின். தன்னை அடையாளம் தெரியுமா ரூபனுக்கு என பேதலித்தே நடக்கிறாள். வழிநெடுக வயது பேதமின்றி அவளுக்கு வணக்கம் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். . அது அவள் புது நன்மை எடுத்து கன்னியாஸ்திரி ஆனதற்கான மரியாதை. இந்த மரியாதைக்கு உரியதுதானா இந்த உடல் என தனக்குள் மருகியபடியே நடக்கிறாள் அவள். தூரத்துல ரூபனைப் பார்த்து விட்டாள். அவன் கூர்ந்து இவளையும் கடலையும் பார்க்கிறான். அங்கிருந்து தடதவென ஓடி வருகிறான் இவளை அச்சமும் பயமும் சூழ்கிறது. இவளை உற்றுப் பார்த்துவிட்டு சம்மனசு என உரத்த குரலில் கத்தியபடியே ஊர் நோக்கி ஒடுகிறான் என ப்ரிம்யா கிராஸ்வின் கதையை முடிக்கிறார்.

சம்மனசு எனும் சொல் குறிக்கும் அர்த்தம் தேவதூதர்கள் என்பதே. நற்பயன் விளைவிக்கும் தேவதூதர்களும் சம்மனசுதான். கெட்ட தேவதூதர்களும் சம்மனசுதான். செலின் யார்?தேவதூதர்களில் எப்படிப்பட்டவள் எனும் கேள்வியை வாசகனுக்குள் விதைத்துவிட்டு கதை நகர்கிறது. எப்போதும் நல்ல சிறுகதை எழுத்தாளார் இட்டு வைத்த கடைசி முற்றுப்புள்ளியில் ஒருபோதும் நிறைவடைவதில்லை. அது வாசிப்பவரின் மனதின் பக்கங்களைத் திறக்கும்.
நான்உறுதியாக நம்புகிறேன். அன்று தேவலாயத்தில் நான் பார்த்த போது கன்னியாஸ்திரி உடையில் கண்ணீர் விட்டு அழுது இறைஞ்சிக் கொண்டிருந்தது செலினாக இருக்கலாம்.

  • ம.மணிமாறன் (தொடரும்)

1)https://maduraiseithi.in/m-manimarans-oru-kathai-1/

2)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-2/

3)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-3/

4)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-4/

5)https://maduraiseithi.in/manimarans-oru-kathai-5/

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *