எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 6

இதுவரை மோனைத் தொடையையும் எதுகைத் தொடையையும் விரிவாகப் பார்த்தோம். இனி எஞ்சியிருக்கும் தொடைகளைப் பார்ப்போம்.

முரண் தொடை

அடிகளிலோ அல்லது சீர்களிலோ, சொல்லோ அல்லது பொருளோ மாறுபட்டு அமைவது முரண் தொடை எனப்படும்.

(உ-ம்)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

இதில் முற்பகல் என்பதும் பிற்பகல் என்பதும் முரண்பட்ட சொற்கள்.

நினைக்கத் தெரிந்த மனமே- உனக்கு
மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே- உனக்கு
விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே- உனக்கு
உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே- உனக்கு
மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா
எடுக்கத் தெரிந்த கரமே- உனக்கு
கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே- உனக்கு
கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே- உனக்கு
முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே- உனக்கு
மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா
கொதிக்கத் தெரிந்த நிலவே- உனக்கு
குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே- உனக்கு
பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா- உனக்கு
இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா- உனக்கு
என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதாபுரியாதா
(கவியரசு கண்ணதாசன்)

மேற்கண்ட பாட்டின் ஒவ்வொரு அடியிலும் முரண்பட்ட சொற்களை வைத்து கண்ணதாசன் அசத்தி இருப்பதைக் காணலாம்.

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்- நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
(கவியரசு கண்ணதாசன்)

இந்தப் பாடல் வரிகளிலும் சிரிப்பு என்றும் அழுகை என்றும் முரண்பட்ட சொற்கள் கையாளப்பட்டுள்ளன.

சொல்லும் பொருளும் முரண்படும் வகையில் முரண்கள் ஐந்து வகைப்படும்:

1.சொல்லொடு சொல் முரணுதல்
2.பொருளொடு பொருள் முரணுதல்
3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
4.சொல்லும் பொருளும் பொருலொடு முரணுதல்
5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணுதல்.

இப்படியான முரண்தொடை எட்டுப் பிரிவுகளாக இருக்கின்றன.

1.அடி முரண்

ஒவ்வொரு அடியிலும் முதற்சீர் மாறுபடப் பாடுவது அடி முரண் எனப்படும்.

(உ-ம்)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

முதலடியின் முதற்சீரும் இரண்டாம் அடியின்முதற்சீரும் முரண்பட்டு வந்திருப்பதைக் காண்க!

வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ?
(கவியரசு கண்ணதாசன்)

இப்பாடலின் முதல் அடி வீடுவரை என்றும் இரண்டாவது அடி காடுவரை என்றும் அடி முரண் பெற்றுத் தொடங்குகின்றன.

2.இணை முரண்

ஓரடியின் முதல் இரண்டு சீர்கள் முரண்பட்டு வருவது இணை முரண் எனப்படும்.

(உ-ம்)
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
(திருக்குறள்- 292)

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்- அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
(கவியரசு கண்ணதாசன்)

மேற்கண்ட இரண்டு பாடல்களிலும் முதல் அடியின் முதல் இரண்டு சீர்கள் முரண்பட்டு வந்திருப்பதைக் காண்க!

3.பொழிப்பு முரண்
ஓர் அடியின் முதற்சீரும் மூன்றாம் சீரும் முரண்பட்டு வருவது பொழிப்பு முரண் ஆகும்.

(உ-ம்)

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
(கவியரசு கண்ணதாசன்)

இப்பாடலில் முதல் அடியின் முதற்சீர் அண்ணன் என்றும் மூன்றாம் சீர் தம்பி என்றும் முரண்பட்டு வந்துள்ளன.

என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து
போனவன் போனான்டீ
போனவன்போனான்டீ
தன்னைக் கொடுத்து என்னை அடைய
வந்தாலும் வருவான்டீ ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனான்டீ
(கவிஞர் வாலி)

இப்பாடலின் முதலாம் அடியிலும் நான்காம் அடியிலும் உள்ள முதற்சீர்களும் மூன்றாம் சீர்களும் முரண்பட்டு வந்துள்ளன.

4.ஒரூஉ முரண்

ஓரடியின் முதற்சீரும் நான்காம் சீரும் முரண்படுவது ஒரூஉ முரண் எனப்படும்

(உ-ம்)

புறத்தூய்மை நீரின் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
(திருக்குறள்

இதில் புறத்தூய்மை என்ற சொல் முதலாவதாகவும் அகத்தூய்மை என்ற முரண்பட்ட சொல் நான்காவதாகவும் வந்திருக்கின்றன.

5.கூழை முரண்

ஓரடியின் முதல் மூன்று சீர்களில் முரண் அமைவது கூழை முரண் எனப்படும்

(உ-ம்)

கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்றன் என்னும்

இதுவொரு செய்யுள் அடி. சிவபெருமானின் வடிவத்தை முதல் மூன்று சீர்கள் வர்ணிக்கின்றன.அந்த மூன்று சீர்களும் மூன்று நிறங்களைக் குறிக்கின்றன.

அடப் பாதங்களேய்! நீங்க
கல்லுப்பட்டு முள்ளுப்பட்டு மண்ணுப்பட்டு நோகாமல்
மெல்ல மெல்ல என்னிடந்தில்
வாருங்களே! வாருங்களே!
(கவியரசு கண்ணதாசன்)

இந்தப் பாட்டின் இரண்டாவது அடியில் கல், முள், மண் என்னும் முரண்பட்ட சொற்கள் வந்துள்ளதைக் காண்க!

6.மேற்கதுவாய் முரண்
ஒன்று, மூன்று மற்றும் நான்காம் சீர்களில் முரண் அமைவது மேற்கதுவாய் முரண் எனப்படும். இதற்கு நல்ல உதாரணம் கிடைத்திலது.

7.கீழ்க்கதுவாய் முரண்
ஒன்று, இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் முரண் அமைவது கீழ்க்கதுவாய் முரண் எனப்படும்.

(உ – ம்)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(ஔவையார்)

முதற்சீர் – அன்னை
இரண்டாம் சீர் – பிதா
நான்காம் சீர் – தெய்வம்

8.முற்று முரண்

ஓரடியில் நான்கு சீர்களிலும் முரண் அமைவது முற்று முரண் எனப்படும்.

(உ -ம்)

காலை மாலையும் இரவும் பகலுமென
ஓயா மழையில் ஓடையான தெரு

முதல் அடியில் நான்கு வெவ்வேறு காலங்கள் நான்கு சீர்களிலும் வந்துள்ளன. அடுத்து நாம் இயைபுத் தொடையைப் பார்ப்போம்.

இயைபுத் தொடை

சீரின் முதலெழுத்து ஒன்றிவரின் மோனை என்றும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரின் எதுகை என்றும் பார்த்தோம். இயைபுத் தொடையானது அடிகளிலும், சீர்களிலும் உள்ள இறுதி எழுத்துக்கள் ஒன்றி வருவனவாகும்.

கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
(இராமச்சந்திரக் கவிராயர்)

இப்பாடலில் ஈற்றிலுள்ள னகரமெய் மற்றெல்லாச் சீர்களின் ஈற்றிலும் ஒன்றி நிற்பதால் இயைபு ஆகின்றது

அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத் தான்
கொண்டு மெல்லாத் தான்
வந்து கண்ணைத் தான்
எப்படி சொல்வேனடி..
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
ஏனத்தான் என்னைப் பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித் தான்
சென்ற பெண்ணைத் தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
அத்தான் என் அத்தான்
அவர் என்னைத் தான் ….
எப்படி சொல்வேனடி
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
மொட்டுத் தான் கன்னிச் சிட்டுத் தான்
முத்துத் தான் உடல் பட்டுத் தான்
என்று தொட்டுத் தான்
கையில் இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி
(கவியரசு கண்ணதாசன்)

மேற்கண்ட பாடலில் இடையிடையே வரும் ஒருசில சீர்களைத் தவிர மற்ற எல்லாச் சீர்களும் தான் என்றும் அத்தான் என்றும் இயைபு பெற்று மிக அழகாக வந்திருப்பதை நோக்குக!

மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம்! இதுவும் கவியரசு கண்ணதாசனின் பாடலே.

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
நான்கு அடிகளிலும் ஈற்றுச்சீர் “ராகம்” என்றே வந்து இயைபு பெற்றிருக்கிறது.

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம்

மேற்கண்ட நான்கு அடிகளும் மேகம், மோகம், பாகம் மற்றும் வாகம் என எதுகையும் இயைபும்(ம்) ஒருங்கே பெற்று வந்திருப்பது அழகு!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்…அது என் யோகம்

இந்தச் சரணத்திலும் மேலே சொல்லப்பட்டுள்ளது போன்றே நாகம், தேகம், யாகம் மற்றும் யோகம்

என எதுகையும் இயைபும்(ம்) ஒருங்கே பெற்று வந்திருப்பது அழகு!

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி…அவள் ஒரு பைரவி…அவள் ஒரு பைரவி

இச்சரணத்தில் நான்கு அடிகளும் வெவ்வேறு எழுத்துகளில் (லி வி ளி வி) முடிந்துள்ளன. இருப்பினும் அந்த நான்கு உயிர்மெய் எழுத்துக்களிலும் உள்ள மெய்யெழுத்துக்களின் மேல் ஏறியுள்ள உயிரெழுத்து ஒன்றே. அதாவது இ என்ற எழுத்தே!

ல்+ இ=லி
வ்+ இ=வி
ள்+ இ=ளி
வ்+ இ=வி

இப்படி ஓசை ஒன்றி வருவதால் இதுவும் இயைபுத் தொடையாகிறது.

இயைபுத் தொடையானது ஏழு விகற்பங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்!

- மனோந்திரா                               (தொடரும்)

1) https://maduraiseithi.in/manondiras-grammar-series-begins/
2)https://maduraiseithi.in/manondiras-easy-grammar-series-2/
3) https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-ease-3/
4)https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-4/
5)https://maduraiseithi.in/manondiras-grammar-series-5/  

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *