
தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் தவெகவில் இருந்து விலகி கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக தீவிரமாக செயல்பட்டவர் அஜிதா ஆக்னல். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக தவெக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட அஜிதா, தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கடந்த ஆண்டு தூத்துக்குடீ மத்திய மாவட்ட செயலாளர் பதவிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். இதனால் பனையூரில் உள்ள தவெக அலுவலத்தில் அஜிதா போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அங்கு வந்த தவெக தலைவர் விஜய் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அவரை விஜய் கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அஜிதா எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், விஜய் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகவே தவெக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கானோர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து அஜிதா கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக திமுகவில் இணைந்திருக்கிறேன்” என்றார்.



