எது பழைய திமுக?… மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

எது பழைய திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 கொண்டு வர ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமர்வில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மக்களவையின் பலம் 543 என்ற எண்ணிக்கையில் இருந்து 850 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டால், எனது தலைமையிலேயே போராட்டம் நடைபெறும். 50, 60களில் இருந்ததைப் போன்ற பழைய திமுகவை இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் அதிமுக நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன். என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் டி.டி.வி. தினகரன் இணைந்து பங்கேற்றார்.மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இருந்தார்.

ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், ‘ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா’ என்று சவால் விட்டவர், கடைசியில் ‘மன்னிச்சுப்பா… ஒன்லி பில்டப் பா’ என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது. பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே… அதுவா? பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின்”என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *