‘இந்த தீ திராவிட மண் முழுவதும் பரவும்’… மசோதா நகலை எரித்த மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறை செய்வதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி தொகுதி மறுவரை மசோதா 2026-ஐ நிறைவேற்ற என்டிஏ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொகுதி மறுவரையறை செய்வதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 16) கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடக்கி வைக்கும் வகையில், நாமக்கல் திமுக நிர்வாகி இல்லத்தின் கருப்புக் கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார். அத்துடன் தொகுதி மறுவரையறைக்காக முன்மொழியப்பட்ட மசோதாவின் நகலையும் எரித்தார்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தொகுதி மறுவரையறை: இந்த எதிர்ப்புத் தீ தமிழகம் முழுவதும் பரவட்டும். பாசிச பாஜகவின் ஆணவம் தகர்ந்து விழட்டும். அன்று, தமிழகத்தில் பற்றியெழுந்த இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியையே சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பிறகே எங்கள் எதிர்ப்புத் தீ தணிந்தது. இன்று, தமிழர்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கும் ஒரு ‘கருப்புச் சட்டத்தின்’ நகலை எரிப்பதன் மூலம், நான் மற்றொரு எதிர்ப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறேன். இந்தத் தீயும் திராவிட மண் முழுவதும் பரவும். இது பாஜகவின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கும்,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். திருச்சியில் உள்ள தென்னூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்திலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *