எச்சரிக்கை…வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை: அர்ச்சனா பட்நாயக்!

வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நாளை(ஏப்ரல் 23) நடைபெறுகிறது. தேர்தல் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,“ சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வெளியே பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 325 வாக்குச்சாவடிகள் பெண்களால் நிர்வகிக்கப்பட உள்ளன. 75 வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 14.59 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக மாநகர் பேருந்துகளில் இலவச பயண வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 5,875 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் மட்டும் 543 கோடி ரூபாயாகும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *