
சிறு சிறு விஷயங்கள் மூலம் அச்சுறுத்தி விட முடியும் என நினைத்தால் அது தவறு என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மாணவர்கள் மத்தியில் ஜேம்ஸ் வசந்தன் ஆற்றிய உரையாடலை சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் தவெகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில், ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் அவரது எக்ஸ் பக்கத்தில், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “ கார் கண்ணாடி உடைப்பு என்பது சின்ன விஷயம்தான். இருந்தாலும் அது மனதை பாதித்துவிடக் கூடாது என்று ஓடிவந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் முகம் தெரியாத உங்கள் அனைவருக்கும் என் நன்றி. தொலைபேசியில் அழைத்து பல்வேறு விதங்களில் உதவிட கட்சி பேதமின்றி முன்வந்த அரசியல் தலைவர்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், பிற அமைப்புகளுக்கும், அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆறுதலைத் தாண்டி, இதைப்போன்ற அறமற்ற செயல்களைக் கண்டிப்பது அவசியம். அதைப் பொறுப்போடு செய்த யாவருக்கும் வாழ்த்துகள் ” என்று பதிவிட்டுள்ளார்.
கார் கண்ணாடி உடைப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஜேம்ஸ் வசந்தன் அளித்த பேட்டியில், “இதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று நான் வீட்டில் இருந்து கிளம்பும்போது என்னைப் பின்தொடர்ந்து வந்து இதனை செய்திருக்கலாம். அல்லது நான் உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது அதனைக் கவனித்து இதனை செய்திருக்கலாம். யார், எதற்காக செய்தார்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவரும்.
நான் எதனையும் யூகிக்க விரும்பவில்லை. முகநூலிலும் கூட ‘தறுதலைகளா? தற்குறிகளா?’ என்றுதான் பதிவிட்டேன். இதற்கு காரணம், தாக்குதல் நடத்துவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது தற்போது நான் சொல்லியுள்ள அரசியல் விமர்சன கருத்துகளால் குறிப்பிட்ட நபர்களாக இருக்கலாம். அதன் காரணமாகவே நான் அப்படி பதிவிட்டேன். என் கார் என தெரிந்தே இதனைச் செய்திருக்கிறார்கள் என்பது என் அனுமானம்.
பொதுநலனுக்கான கருத்துகளைச் சொல்லும்போதே பலரையும் நாம் பகைத்துக்கொள்வோம் என்பது நமக்கு தெரியும். இப்படியான சிறுசிறு விஷயங்கள் மூலம் நம்மை அச்சுறுத்திவிட முடியும் என அவர்கள் நினைத்தால், அது தவறு. என் பணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.



