
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற விஜய் , அங்கிருந்து சாலை வழியாக இன்று (ஏப்ரல் 28) அதிகாலை திருச்செந்தூர் சென்றடைந்தார். அங்கு, விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை விஜய் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், வெற்றி வேல் வழங்கப்பட்டது. பின்னர், கடற்கரைக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார்.விஜய் வருகையை முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சாமி தரிசனத்தை முடித்த விஜய், மீண்டும் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.



