
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று (ஏப்ரல் 29) தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே. தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்கு துணை நிற்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.



