
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் காவல்துறையினர் விடுப்பு எடுக்கக்கூடாது என டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் என அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு காப்பறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள மையங்களில் 18 ஆயிரம் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், காப்பறைகள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4- ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
மேலும், விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2-ம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்க கூடாது. ஆனால் மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு, முறையான காரணங்களுக்கு பெறப்பட்ட மருத்துவ விடுப்பு ஆகிய விடுப்பில் இருக்கும் காவலர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலானது களப் பிரிவுகள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகள் காவலர்களுக்கு பொருந்தும். உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்” எனவும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.



