
பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு பார் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் (54) கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சட்டப்படிப்பு முடித்துள்ள பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பியும், வழக்கறிஞருமான ஆர்.சுதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளார். மேலும் பேரறிவாளன் வழக்கறிஞா் பதிவை திரும்பப் பெற பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க…
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து அவர் கூறுகையில், ” சட்டப்படி ஒருவா் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராக பதிவு செய்யலாம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா் வழக்கறிஞராக பதிவு செய்வது இது முதல்முறை அல்ல. பேரறிவாளனின் ஆவணங்கள் பாா் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டாா். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.



