
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆண்டு தோறும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் தின நினைவுத் தூணிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே முதன் முதலில் சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. சிங்காரவேலர் தலைமையில் தான், முதன் முதலில் சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது.

உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பது தொழிலாளர்களின் உரிமை. அதேபோல், இன்றைக்கு நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலனை மே 4-ம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை. கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை. களத்தை பார்த்ததால் கூறுகிறேன். தொழிலாளருக்கான மரியாதையை, மதிப்பை, உரிமையைப் போற்றும் வகையில் இந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மே தினத்தன்று அரசு விடுமுறையாக அறிவித்தார். அத்துடன் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கான சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இயற்றினார்.
தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறையில் இருந்த இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அதனை ஏற்று, இந்தியா முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அமல்படுத்தினார். இந்த மே தினப் பூங்காவை கலைஞர் அவர்கள் தான் அமைத்துக் கொடுத்தார். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது உரிமைகள் மீது கலைஞர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம்” என்றார்..



