
சுற்றுகள் குறைவாக இருப்பதால் மதுரையில் 3 தொகுதிகளின் ரிசல்ட் விரைவில் வெளியாகும் என்று கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் பத்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. மதுரை கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளின் வாக்குகள் ஒத்தக்கடை வேளாண் விவசாய பல்கலைக்கழகத்திலும், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதி வாக்குகள் கீழக்குயில்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலும், மதுரை மத்தி, மேற்கு ஆகிய தொகுதிகளின் வாக்குகள் மதுரை கல்லூரியிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதி வாக்குகள் கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
இந்த நிலையில், சுற்றுகள் குறைவாக இருப்பதால் மதுரையில் 3 தொகுதிகளின் ரிசல்ட் விரைவில் வெளியாகும் என்று கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரவீன் குமார் கூறுகையில், மதுரை மாநகரில் உள்ள மதுரை மத்தி, வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு சுற்றுகள் குறைவாக இருப்பதால் தேர்தல் முடிவுகள் விரைவாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று புகார் கூறியுள்ளனர். கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்தில் மீடியா அறையில் பிளாக் பாயிண்ட் வசதி கூட இல்லை என்று செய்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை கப்பலூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்கள் அறையில் தொலைக்காட்சி மற்றும் பிரிண்டர் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை இல்லாத நிலை உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். குடிநீர், கழிப்பறை வசதியில்லை என்றும் கூறிய ஊடகவியலாளர்கள், இந்த பிரச்னையை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கவனிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



