தவெக ஆட்சி அமைக்க ‘கை’ கொடுக்குமா காங்கிரஸ்?

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி பேரம் நடைபெற்ற போதே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி, தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 108 இடங்களைப் பிடித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

அந்த கட்சி ஆட்சி அமைக்க 118 என்ற எண்ணிக்கை தேவைப்படுகிறது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றுறுளளன. 164 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக 60 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திண்டிவனம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளிலும், 5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேலூர், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக சீர்காழியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பெற்ற வாணியம்பாடி, பாபநாசம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெகவில் இருந்து சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ், பாமக , தேமுதிக ஆகிய கட்சிகளிடம் தவெக சார்பில் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. தவெகவிற்கு ஆதரவு அளிக்க அன்புமணி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமையும் அரசில் சௌமியா அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவியும், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியையும் பாமக வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அது. இதனால் அதிர்ச்சியடைந்த தவெக தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விஜய் நாளை(மே 6) சந்திக்க உள்ளார். இதன் பிறகு ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், விரைவில் தவெக ஆட்சி அமைக்கும் பதவியேற்பு விழாவுக்கு ஆளுநர் நேரம் குறிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர் அளிக்கும் கால அவகாசத்திற்குள் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டும். எனவே, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கப் போவது திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *