
தவெக தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில்,
தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினர். அதற்கு பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுபபினர்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்பிக்க்குமாறு ஆளுநர் கோரியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு முறையாக ஆளுநரை சந்தித்து தவெக நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநகர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் இன்று(மே 7) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போய் உள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “தவெக தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் . ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம். எனவே, எங்களைப் போல மாதம் 1,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தரும் விஜய்யின் வாக்குறுதியை நிறைவேற்றினால் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.



