
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இதனை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணியளவில் வெளியாகின. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளனர். 489 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் 98.07 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட இரண்டாது இடம் பிடித்து 98.05 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது, கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்து 97.63 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழ்நாடு அளவில் அரசு பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம், திருச்சி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.17% தேர்ச்சி விகிதம் கூடுதலாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வை 250 சிறைவாசிகள் எழுதியிருந்தனர். அதில் 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மே 13- ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலி வழியாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 78452-52525 என்ற எண்ணுக்கு “Hi” என பதிவிட்டு, பின்னர் வரும் தகவலுக்கு கீழ் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை குறிப்பிட்டால், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை கேட்கும். அவற்றை பதிவு செய்தால், தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில், மாணவர்களுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தேர்வெழுதிய மாணவ செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ‘Result’ தான், இதுவே ‘life’ கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக தேர்ச்சி விகிதம் பிடித்து சாதனை படைப்போம் என நம்புகிறோம். மாணவ செல்வங்கள் தங்கள் முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.



