
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணியளவில் வெளியாகின. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளனர். 489 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் 98.07 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட இரண்டாது இடம் பிடித்து 98.05 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது, கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்து 97.63 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிளஸ் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,” பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள். 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அன்பில் மகேஷ் பொய்மொழி அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள். கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை” என்று அவர் தெரிவித்துள்ளார்.



