
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரத்தின் வெப்பம் படிப்படியாக குறையும் வகையில் பல மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மே 13-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவாலா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, லாலாப்பேட்டை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கோவை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள், மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை நேற்று கொட்டியதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று (மே 8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நிலவுகிறது. இதனால், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மழைப்பொழிவு மேலும் அதிகரித்து, 22 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளது..



