
ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் மாறியது. ஆனால், அந்த கட்சி ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக கோரியது. சில நிபந்தனைகளுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. இதனைத் தொடர்ந்து தவெக தரப்பில் விசிக, இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
இதனை தொடர்ந்து சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியில் இருந்த ஐயுஎம்.எல் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பான கடிதத்தை அக்கட்சி மின்னஞ்சல் மூலம் தவெகவிற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் தவெக 118 என்கிற மெஜாரிட்டிக்கான எண்ணிக்கையை எட்டியது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து ஆதரவு அளித்த கட்சிகளின் கடிதங்களுடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து நாளை (மே 9) காலை 11 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆதரவளித்த கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்தார்.



