எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை: மதுரையில் எம்.ஏ.பேபி பேட்டி

எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை. கூட்டணி பயணம் தொடரும் என்று எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

மதுரை நரிமேட்டில் மார்க்சிய ஆசான் தோழர் எஸ்ஏபி நூல் வெளியீட்டு விழா இன்று (மே 9) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். எம்.ஜே.பிரபாகர் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி நூலை வெளியிட்டார்.

இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், கண்ணன் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பின் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தமிழகத்தில் ஆட்சியில் இருந்தத திமுக கூட்டணி தோல்வியடைந்ததுடன், எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மைக்கு 11 இடங்கள் குறைவாக உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசியல் மரபுகளின்படி னிப்பெரும் கட்சியையோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியையோ ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பது கேள்வி எழுப்புவது முறையற்றது. 1990-களில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக பெரும்பான்மை இல்லாத போதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவரை பிரதமராக அழைத்தது ஒருமுக்கிய உதாரணம். பின்னர்த அவர் பதவி விலகிய சம்பவம் 13 நாள் அதிசயம் என அறியப்பட்டது. மேலும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு கட்சி அல்லது கூட்டணியின் பெரும்பான்மை சட்டமன்ற தளத்திலேயே நிரூபிக்க வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது. இது நன்கு நிறுவப்பட்ட கொள்கையை ஆளுநர் பின்பற்றவில்லை என்பது வருத்ததிற்குரியது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

தமிழக மக்களின் தீர்ப்பை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், பாஜக ஆதரவு கொண்ட அரசை அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி தனது மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுவுடன் ஆலோசித்து தனிப்பெரும்பான்மை கட்சியான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியது. அதில் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுடன் ஆலோசித்தே எடுக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைமையிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது. அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்துக்கு வர பாஜக துடிக்கிறது. குதிரை பேரத்திற்கு நாங்கள் எதிரானவர்கள். ஆளுநரின் கால தாமதம் காரணமாகவே இது நடக்கிறது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறிய புகார் தொடர்பாக எனக்குத் தெரியாது. தவெக அளித்த கடிதம் குறித்து ஆராய வேண்டியது ஆளுநரின் வேலையல்ல. தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதியளிப்பது மட்டுமே ஆளுநரின் வேலை. தவெக தலைவர் விஜய், மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளார். அவர் மதச்சார்பற்ற அரசை அமைப்பதாக தான் எங்களிடம் தெரிவித்துள்ளார். டெல்லி தமிழக ஆட்சியைப் பிடிக்க முயல்வது தவறு. நாங்கள் தவெக தலைவர் விஜய்யை நம்புகிறோம். திமுக – அதிமுக ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி. ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. அவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளனர். எனவே அதை நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை. கூட்டணி பயணம் தொடரும். அனைத்து மதச்சார்பற்ற கொள்கைகளிலும் நாங்கள் தொடர்ந்து அவர்களை ஆதரிப்போம்” என்றார். இந்த விழாவில் எஸ்.ஏ.பெருமாள், வசந்தா தம்பதியருக்கு கட்சியினர், தொழிற்சங்கத்தினர் நினைவுப்பரிசுகளை வழங்கினர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *