தவெகவுக்கு வாக்களித்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும்: சி.வி.சண்முகத்திற்கு எச்சரிக்கை

விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தால் அதிமுக எம்எல்ஏக்களின் பதவி போகும் என்று இன்பதுரை எம்.பி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம்,விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. இதனைத் தொடர்ந்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறது இதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அதிமுக சி.வி. சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களில் ஒருபிரிவினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான வழக்கறிஞர் இன்பதுரை அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத். தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி: ” ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது. மேலும், உச்ச நீதிமன்றம் ‘சட்டமன்றக் கட்சி’ மற்றும் ‘அரசியல் கட்சி’ இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை “அரசியல் கட்சியை தான் அங்கீகரிக்கிறது” எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அ.தி.மு.க. எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை,” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *