
தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில்
10 ஐபிஎஸ் அதிகாரிகளை இன்று (மே 14) இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி ஐபிஎஸ் சைபர் க்ரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதேபோல், பகேரியா செபாஸ் கல்யாண், சரவணன், கருண் உத்தவ் ராவ், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன், சிலம்பரசன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செயயப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
இந்நிலையில் தற்போது மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையில்” ஆவின் நிறுவனத்தின் டிஜிபி மற்றும் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த ராஜீவ் குமார், தற்போது சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது ஆவின் நிறுவனத்தின் டிஜிபி மற்றும் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் குமார் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணியிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி செந்தில் வேலன், தற்போது சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமியின் ஐஜி மற்றும் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



