
50 நாட்களாகியும் அரசு கொள் முதல் நிலையத்தில் நெல்லுக்குரிய தொகையை வழங்கவில்லை என மதுரை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி, மேலநாச்சிகுளம், கீழ நாச்சிகுளம் பகுதி விவசாயிகள் கொள்முதல் செய்த நெல்லுக்கு 50 நாட்களாகியும் பணம் வரவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தை இன்று (மே 14) முற்றுகையிட்டனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்,” தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சுமார் 1 லட்சம் மூடை நெல்லை கொள்முதல் செய்தும் இதுவரை பணம் வழங்கவில்லை. 20 நாட்களுக்குள் பணம் வர வைக்கப்படும். ஆனால், 40 நாட்களாகியும் பணம் வரவில்லை என்று கரட்டுப்பட்டியில் மறியல் நடத்தினோம். மே 13-ம் தேதிக்குள் பணம் வரவு வைக்கப்படும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
ஆனால், இதுவரை பணம் வரவு வைக்கப்படவில்லை. தனியாரிடம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்து நெல்லை வழங்கியும் 2 மாதங்களாக பணம் தராமல் இழுக்கிறார்கள். கேட்டால், நிதியில்லை என்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் பணம் விவசாயிகள் கணக்கில் ஏறி விடும் என்கிறார்கள். அப்படி பணம் வழங்காவிட்டால், விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்றனர்.
இதே போல மதுரை மேற்கு ஒன்றியம் மாலைப்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் செய்த பணம் வரவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயி ஜெகநாதன் கூறுகையில், ” மார்ச் 28-ம் தேதி நெல் வழங்கினேன். ஆனால், இதுவரை பணம் வரவில்லை. இந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டால் உரிய பதில் தரமறுக்கிறார். எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர், மாலைப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்



