
சமகாலத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்கங்களில் நாவல்கள் தொடர்ந்து வெளிவருவது தமிழ் இலக்கியச் சூழலில் மிகுந்த வளமையாக பார்க்கிறேன். அந்த வகையில் சாம்ராஜ் அவர்கள் எழுதிய கொடைமடம் நாவல், ஒரு முக்கியமான மார்க்சிய லெனினியத் தத்துவத்தை உள்ளீடாக வைத்து, மதுரையின் நிலப்பரப்பை அளவீடாக கொண்டு, அதில் அழுத்தமானதொரு காதலை சரடாக பின்னி, தத்துவத்தின் மீதான எள்ளலும், சமூகத்தின் மீதான பகடியுமாக, பல அத்தியாயங்களில் நெஞ்சை கனக்க வைக்கும் சம்பவங்களுடன், ஒரு எளிமையான மொழி நடையில், மிக அடர்த்தியான நாவலை தந்திருக்கிறார்.
வாசிக்க எடுத்தால் நூலை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு சுவாரசியம் நாவல் நெடுக நடந்துசெல்கிறது. நாற்பது வருடத்திற்கு முந்தைய மதுரையைப் பற்றிய எத்தனை விவரங்கள், எத்தனை தகவல்கள், மதுரைவாசிகளுக்கு இன்னும் நெருக்கமானதொரு நாவலாக மாறிவிடுகிறது. இவர் படம் வரைந்து பாகம் குறித்த அத்தனை நிலப்பரப்புகளும் நானறிந்தவை எனும் போது மனம் இன்னும் குதூகலமாகி விடுகிறது.
முகுந்தன், ஜென்னி வழியாகத் தான் இந்த நாவல் பயணம் போகிறது. அவர்களின் காதல் பிரிவினையுடன் தான் இந்த நாவலும் நிறைவடைகிறது. முகுந்தன் இலக்கியம் தெரிந்த சமூகத்தின் மீதான அலட்சியப் பார்வையுடன் அணுகும் இளைஞன். ஆனால் ஜென்னியோ மார்க்சியம்,லெனின், மாவோ படித்த அதிதீவிரச் சிந்தனையுடன் இயக்கத் தொடர்புள்ள தோழர். இவர்கள் இருவரும் தத்துவத்தின் வாயிலான உரையாடல் வழியாக தங்கள் காதலை முன்னெடுத்து செல்கிறார்கள். ஜென்னி ஒரு அதி தீவிரப் பெண்ணாக காட்டப்படுகிறார். தன்னை மார்க்சிய சித்தாந்தத்தை கரைத்து குடித்தவராக காட்டிக் கொள்கிறார். விலங்குகளையும், பறவைகளையும் வீட்டில் வைத்து மிகு அன்பு செலுத்தி வரும் அவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சக மனிதர்களை எதிரியாக பாவிக்கிறார். எவ்வளவு தூரம் என்றால் தன் காதலனை வைத்து பக்கத்து வீட்டில் நள்ளிரவில் மோட்டார் திருட அனுப்பும் அளவு பகைத்தீயோடு அலைகிறார்.

சாம்ராஜ்
காதலன் முகுந்தன் சட்டை பட்டனை திறந்து விட்டாலே கோவித்துக் கொண்டு, ஒழுக்கம் குறித்து மிக விரிவாக வகுப்பெடுக்கும் அவர் இரவில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெலாம் முகுந்தனோடு உறவு கொள்கிறார். காதலனை அடிமையாக நடத்துவதால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் முகுந்தன் விலகி விடுகிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜென்னி இருக்கிறாள்.பெண் வடிவெடுத்து வந்தாலும் ஆதிக்கம் என்பது ஆதிக்கமே. மார்க்சியம் என்பது மிகச் சரியான லட்சியப் பாதை. அதை அடைவதில் பல்வேறு இயக்கங்களுக்கு இடையே நடைபெரும் முரண்பாடான வழிமுறைகளே மக்களிடம் நம்மை அந்நியப்படுத்துகின்றன. ஒரு சர்வதேசத் தத்துவத்தை அமல்படுத்துவதில், ஒவ்வொரு நாடுகளுக்கும் ஓராயிரம் பிரச்னைகள் இருக்கும். அதன் தன்மையை புரிந்து கொண்டு அந்த நாட்டை, மக்களை, அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கல்வியறிவு, மார்க்சியத்தை உள்வாங்கும் திறன் என மிகக்கடினமான பரிசோதனைக் களமிது.
ஒரு நாட்டின் மார்க்சிய வெற்றி அதன் வழிமுறைகள் இன்னொரு நாட்டிற்கு கொஞ்சமும் பொருந்தாது. அதன் சூழலை புரிந்து கொள்ளாமல் மிகு அதிதீவிரவாதப் போக்குடன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நக்சல்பாரிகள் இயக்கம், மார்க்சிய லெனினிய மாவோயிச இயக்கங்கள் படுதோல்வி அடைந்ததுடன், வலதுசாரிகளின் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானது. அது மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்திய பொது உடமை கட்சிகளையும் சேர்த்தே பாதித்தது. நாவலின் பல இடங்களில் அந்த கிண்டல் தொடர்ந்து வருவதை பார்க்கும் போது ஒரு மார்க்சியனாக வருந்துகிறேன். ஒரு வேளை நாவலாசிரியர் அமைப்பில் இருந்து வெளியேறியவராகவோ, அல்லது வலதுசாரி சிந்தனையாளராகவோ இருக்கக் கூடும். ஜெயமோகன் சொல்லி ஒரு நாவலை எழுதியிருப்பதால், அது பின்தொடரும் நிழலின் பிரதியாகக் கூட இருக்கக்கூடும்.
உபகதைகளில் அந்த வாடை சற்று தூக்கலாகவே இருக்கிறது. இடதுசாரிகளுக்கு எதிரான பேனாமுனைகள் எப்போதும் நக்கலும் நையாண்டியுமாக மகிழ்ந்து கூத்தாடுவதை சகிக்க முடியவில்லை. மதுரையும், அதன் சுவாரசியமான மொழி நடையும், நம்மை வாசிக்க வைத்து நம் மீதே எச்சில் துப்பும் கலையை மிகச் சாதுர்யமாக கையாளுகின்றன. காமத்தியர்களாக, கந்துவட்டிக்காரர்களாக, குடிகாரர்களாக, சொல்லொன்றும் செயலொன்றும் பேசித் திரிபவர்களாக, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டலைபவர்களாக, இப்படி பல கதைகள் நமக்கு கடத்தப்படுகின்றன. அதே சம காலத்தில்தான் ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் இம் மண்ணில் வேறோடின. அவற்றை பின்புலமாக வைத்து யாதொரு நாவலும் இங்கே எழுதப்படுவதில்லை என்பதில் உள்ள அரசியல் கூர்மை யானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை களமாக வைத்து எழுதியிருந்தால் மிகப்பெரிய எதிர்வினையை சந்திக்க நேரிடுமோ என்றெண்ணி, ஒரு வேளை இம்மண்ணில் இல்லாத மாவோக்களை, நக்சலைட்டுகளை வைத்து எழுதினாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் ஒரு உள்நோக்கம் இருப்பதை உணர முடிகிறது. 57 அத்தியாயங்களை தனியாக பிரித்து அதை ஒரு நாவலாகவும், 23 உப கதைகளை பிரித்து அதை சிறுகதைத் தொகுப்பாகவும் கொண்டு வந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். உபகதைகள் யாவும் ஆகச் சிறந்த சிறுகதைகள் என்பேன். முதன்மைக் கதையை நாவலாகவும், உபகதையை சிறுகதைத் தொகுப்பாகவும் கொண்டு வந்திருக்கலாம். 600 பக்கம் என்னதான் சுவாரசியமான மொழி நடையாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் மிகுந்த அயர்ச்சியாக மாறிவிடுவதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
எழுத்தாளர் மிகுந்த நுண்மான் நுழைபுலம் மிக்கவர் என்பதை அவர் விவரிக்கும் காட்சிகள், சொல்லிச் செல்லும் செய்திகள், வரைந்து காட்டும் நிலப்பரப்பு சித்திரங்கள், மதுரையை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்த சாதுர்யம், பாலியல் சார்ந்த சொல்லாடல்கள், காட்சி வருணனைகள், இந்த மண்ணில் புழுதிபட புரண்டு எழுந்தவரால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் இந்நாவலின் வழியாக, தங்கள் பால்ய காலத்திற்குள் இழுத்துச் செல்லும் சுழியாக உணர்வர். இளந்தலைமுறைக்கு இந்த நிலவியல் காட்சிகள் புதிராக இருக்கக்கூடும். அன்றிருந்த பல கண்மாய்கள், நீர்நிலைகள் இன்று அரசு அதிகாரக் கட்டடங்களாக மாறியிருப்பதை நாவலின் ஊடாக தொட்டுச் செல்கிறார். எந்த மனித வாழ்வியலில்தான் தான் வாழ நினைத்த வாழ்க்கைக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. கனவுகளும் பொருந்தாத நனவுகளுமாகத்தான் வாழ்வும், தான் சார்ந்திருக்கிற கொள்கையும் நீர்த்துப் போய் விடுகிறது.
அதற்காக தான் கொண்ட லட்சியத்தை தவறாக சித்தரிக்கும் போக்கை ஏற்க முடியாது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதே மனித லட்சியமாக இருக்க வேண்டும்.உப கதைகள் முழுக்க கண்ணீர் காவியங்களே, கணவனால் கொலை செய்யப்பட்ட பொன்னம்மாளை தெய்வமாக வணங்கும் பெண்கள், தோழர் சுதாகர், ஆர்கே, செம்முகில் இடையேயான கதைகள், எளிய மக்களிடம் அவர்கள் மொழியில் பேசாத தாமஸ், எழிலன், வள்ளி முருகன் கல்யாண மண்டப கலாட்டாக்கள், கலைக் குழுக்களை ஒருங்கிணைத்து அதில் நடக்கும் கூத்துகள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தும் வர்கீஸ், புன்னகைக்க தெரியாத கலைக்கோ, மிகவும் உருக்கமான கதையான தோழர் ராமச்சந்திரன்- சஜீதா துயரங்கள், தோழர் ஜெகதீசன்- பூஞ்சோலை காதல் கதை, அஞ்சு லட்ச ரூபாயை சேர்க்க 75 ரூபாயோடு புறப்படும் தோழர் ஞானத்தின் நேர்மை, மாவோவின் படத்தை வீட்டில் மாட்டி அவஸ்தைபடும் நாகேந்திரன், என பல்வேறு வாழ்வியல் துயரங்களை சித்திரங்களாக காட்டி நம்மை துன்பக் கேணியுள் அமிழ்த்துகிறார் சாம்ராஜ். மொத்தத்தில் சிவப்பு சிந்தனையாளர்கள் குறித்தான தவறான பிம்பத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விடக் கூடுமோ என்ற அச்சம் எழாமல் இல்லை. விமர்சனங்கள் இருப்பினும் உரையாடலுக்கு ஏற்ற புத்தகம் இது எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
– செ.தமிழ்ராஜ்
கொடைமடம் (நாவல் )
எழுத்தாளர்: சாம்ராஜ்
ஆண்டு: 2024
பக்கம்: 609
விலை::ரூ. 750
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
செ.தமிழ்ராஜ் எழுத்துலகம்
1)https://maduraiseithi.in/documentary-thiruparankundram-files/



