
திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் இன்று (மே18) நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றதை முன் வைத்து, பலர் திமுகவின் கதை முடிந்துவிட்டதாக கூறி வருகிறார்கள். ஆனால், திமுக இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்துள்ளது. பல தேர்தல்களில் திமுக வெற்றியை கண்டுள்ளது. அதேபோல், பல தேர்தல்களில் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால், தோல்வி அடையும் நேரத்தில்தான், திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது.
இங்கு பேசியவர்கள் பலர் சோகத்தில் இருப்பதை நான் பார்க்கிறேன். மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, எதிரில் இருக்கக் கூடியவர்களும் சோகத்தில் உள்ளனர். நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம்தான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறோம். நம்முடைய 5 ஆண்டுகால ஆட்சியின்போது, அனைத்து தரப்பு மக்களுக்குமான பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றினோம். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெகவிடம், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தொடரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.

நாம் வைத்த கோரிக்கை, இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. நம்முடைய இந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வரை, நாம் தான் தமிழ்நாட்டை ஆளுகிறோம் என அர்த்தம். எனவே, இந்த தேர்தலில் திமுக தோல்வியுற்றதைக் கண்டு நான் சிதறி போகவில்லை; மனம் உடைந்தும் போகவில்லை. 234 தொகுதிகள்ல இன்றைக்கு என்ன நிலை, எப்படி வெற்றி பெற்றிருக்கிறோம், எப்படி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம், என்ன காரணம் என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நாம் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம்.
அந்தக் குழு மட்டும் அல்ல, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒரு வெப்சைட்டையும் ஆரம்பிச்சிருக்கிறோம். ஆக, அந்த வெப்சைட்ல கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்ல, பொதுமக்களும், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் அதிலே தங்களுடைய கருத்துக்களை வெளியிடலாம். எந்த பணியையும் செய்யாமல் தவெக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்காளர்களைச் சந்திக்கவில்லை, பூத் ஏஜென்ட்டுகள் அமைக்கப்படவில்லை, கவுண்டிங் ஏஜென்ட் கூட அவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்.
அவர்கள் இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளார். குறிப்பாக, சிறுவர்களை பரப்புரை செய்ய வைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அது நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இனிமேல் நாம் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்கக்கூடிய வகையிலே அந்தப் பணியை நாம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் எல்லாம் தீட்டியிருக்கிறோம்.
எனவே, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் இருக்கு, நம்முடைய இயக்கம் இருக்கு. நாங்கள் இருக்கிறோம், எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம், வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்” என்று தெரிவித்தார்.



