மந்திகுளம் உரக் கம்பெனியால் ஆபத்து: கலெக்டரிடம் அறிவியல் இயக்கம் பரபரப்பு புகார்

மந்திகுளத்தில் உள்ள தனியார் உரக்கம்பெனி மாசினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய அறிவியல் இயக்க மேனாள் தலைவர் பேரா பொ..ராஜமாணிக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆண்டனிபால், மாவட்ட செயலாளர் முனைவர் க.கண்ணன், மாவட்ட பொருளாளர் வெண்ணிலா, துணைத்தலைவர் ரமேஷ், எழில் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர்.

மந்திகுளத்தில் உள்ள உரக்கம்பெனி.

இதன் பின் அகில இந்திய அறிவியல் இயக்க மேனாள் தலைவர் பேரா பொ..ராஜமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதுரை மாவட்டம் மந்திகுளம் ஊராட்சி, நத்தம் மெயின் ரோட்டில் சயின்டிஃபிக் அக்ரிகல்சுரல் லேபோரட்டரி (Scientific Agricultural Laboratory) என்ற தனியார் கம்பெனி 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது மண் ஆய்வு, உரம், தாவர நோய் ஆகியவற்றிற்கான ஆராய்ச்சி நிலையமாகவும் அதற்கான ஆலோசனை ,தேவையான பொருட்கள் தயாரிப்பு, வர்த்தகம், விற்பனை செய்தல் ஆகியன செய்து வருவதாக அதன் இணைய தளம் மூலம் அறிகிறோம்.

இச்சூழ்நிலையில் இக்கம்பெனி வெளியிடும் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் மனித நலனுக்கும் கேடு விளைவிப்பதாக 23-12-2022ல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, சமூக ஆர்வலர் அசோக் என்பவர் மனு செய்துள்ளார். மீண்டும் ஒரு மனுவை 02-10-2023 அன்று முதலமைச்சர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியருக்கும் மனு செய்துள்ளார். ஆனால், இது வரை எத்தரப்பில் இருந்தும் மனுதாரருக்குப் பதில் இல்லை. இந்த நிலையில், அப்பகுதி மக்களிடம் வந்த கோரிக்கையை ஏற்று இப்பிரச்னையின் உண்மைத்தன்மையை அறிய 12-05-2026 அன்று மந்திகுளம், ஆதிதிராவிடர் காலனி, உசிலம்பட்டி,ஜெயபாரத் ஹவுசிங் ஆகிய நான்கு இடங்களில் நான்கு குழுக்கள் 20 கேள்விகள் கொண்டு மாசு பிரச்னை,மனித, பிற உயிரின நலப்பிரச்னைகள் குறித்து ஒரு மக்கள் கருத்துக் கணக்கெடுப்பு நடத்தினோம்.

மந்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் கணக்கெடுப்பின் அடிப்படையில், அப்பகுதியில் இயங்கி வரும் சயின்டிஃபிக் அக்ரிகல்சுரல் லேபோரட்டரி தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காற்று மாசு, துர்நாற்றம், புகை வெளியேற்றம் போன்ற பிரச்னைகள் நிலவுவதாகவும் நீர் மற்றும் மண் மாசு காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் மற்றும் மீன்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பெனியில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை

மேலும் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, இருமல், ஆஸ்துமா போன்ற உடல்நலப் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் காய்ச்சல், உடல் வலி போன்ற உடல்நல குறைபாடுகளையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் கருத்தில் கொண்டு, மந்திகுளம் பகுதியில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் அடிப்படையில், இக் கம்பெனியின் மாசு வெளியேற்றம் குறித்து மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தர மாவட்ட ஆட்சியர் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மனுதாரர் உள்ளிட்ட பிரதிநித்துவம் கொண்ட ஒரு உண்மை கண்டறியும் குழுவுடன் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்த ஆய்வு அறிக்கையை சம்பந்தப்பட்ட கிராமப் பிரதிநிதிகள் மூலம் மக்களிடம் தெரிவித்து அவர்களின் கருத்தைக் கேட்டு உரிய முடிவெடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக 31-03-2026 அன்று முடிவடைந்த சயின்டிஃபிக் அக்ரிகல்சுரல் லேபோரட்டரி தொழிற்சாலையின் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டதா என மாவட்ட ஆட்சியர் சோதிக்க வேண்டும். குறிப்பாக உர உற்பத்தி/மொத்த விற்பனை உரிமம், பூச்சிக்கொல்லிகள் உரிமம், மண் பரிசோதனை அங்கீகார உரிமம், சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்( NABL) அங்கீகார லைசென்ஸ்களுடன் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *