10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எக்காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார். இதில், பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன்படி 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். உங்க கேரியரை உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. இந்த முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடணும்னு வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *