
கர்நாடகாவில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் கோவிந்தபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் அப்புகௌடா பாட்டீல். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரேவன்சித்தப்பா நிராலே குடும்பங்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தப் பிரச்னையை சுமூகமாகத் தீர்ப்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
அதன்படி நிராலே குடும்ப உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இதுகுறித்து மீண்டும் விவாதிக்க நேற்று ( மே 29) மாலை சென்றுகொண்டிருந்தனர். அப்போதுபீமா தீரா பகுதியில் பதுங்கியிருந்த கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அவர்கள் முதலில் அப்புகௌடா பாட்டீல் குடும்பத்தார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதன் பின் வாள், அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் உள்ளனர். இதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த துண்டப்பா நிராலே (65), சந்து நிராலே,(55), சிவபுத்ரா நிராலே(58), அவரது மகன்கள் ராகுல் நிராலே(25), சமர்த் நிராலே(23), தோட்ட வேலை செய்யும் ஷபீர் நதாஃப்(45) ஆகிய 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அரவிந்த் யஷ்வந்த்(72) மற்றும் சந்தீப் பாரத் மானே(33) ஆகிய 2 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகாயமடைந்தனர். இந்த கொடூரமான சம்பவம் குறித்து தகவல் அறிந்த சடச்சனா காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அப்புகௌடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த்,பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்ததால் கோவிந்தபுரா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



