ராகுல்காந்தி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு!

ராகுல்காந்தி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

உத்தாரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் சிலர் சுத்திகரிப்பு யாகம் நடத்தியதாகக் கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அந்த ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்கள் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஒரு மதச்சடங்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிய சாயம் பூசினார் என்று ஹல்த்வானியில் ஜவஹர் நகரைச் சேர்ந்தவரும், ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் உறுப்பினருமான அமித் குமார், போலீஸில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் அளித்த புகாரில், சடங்கு மற்றும் தூய்மைப் பணி இயக்கத்தின் போது தான் உடனிருந்ததாகவும், ஆகஸ்ட் 29 அன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காந்தி தெரிவித்த கருத்துகள் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி மீது, குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *