
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 28) நள்ளிரவில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்கள்) ஊடுருவ முயற்சி மேற்கொண்டன. 22 ஜம்மு-காஷ்மீர் ரைஃபிள்ஸ் பிரிவின் செயல்பாட்டுப் பொறுப்புப் பகுதிக்குள் உள்ள பெஹ்ரூட்டி பொதுப்பகுதிக்கு மேலே அந்த ட்ரோன் பறந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. ட்ரோன் ஊடுருவலைத் தொடர்ந்து, எல்லை வேலிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தென்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பகுதியில் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது போதைப்பொருட்கள் ஏதேனும் வீசப்பட்டதா என்பதை அறிய, சம்பவத்திற்குப் பிறகு உடனடியாகத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இருப்பினும், எதுவும் கைப்பற்றப்பட்டதாக தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதே போல நௌஷேராவின் ரூமில் தாரா பகுதியில் மூன்று பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாரமுல்லாவின் குன்சர் பகுதியில் உள்ள வுசான் பங்க் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை குன்சர் காவல் நிலையம், சிறப்பு நடவடிக்கைக் குழு, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ராணுவத்தின் ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் வீரர்களை உள்ளடக்கிய கூட்டுப் படையினரால் நடத்தப்பட்டது.



