வணிக சிலிண்டர் விலை உயர்வு… பெட்ரோல், டீசல் விலை 6வது முறையாக உயர்வு

வணிக சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான யுத்தம் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இறக்குமதி சுமையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

கடந்த மே 15- ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது ரூ. 15 வரை அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் தற்போது வரை கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல் விலை ரூ. 8 உயர்ந்திருக்கிறது. தட்டுப்பாடு அதிகமாகும் பட்சத்தில் இந்த விலையானது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடைசியாக, மே 29-ம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 108.01க்கும், டீசலுக்கு 23 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மே 30-ம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசாவும், டீசலுக்கு 23 பைசாவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 11 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 107.87க்கும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப வீட்டு உபயோகக் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான கியஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில் இன்றும் (ஜூன் 1) வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, இன்று ரூ. 46 உயர்ந்து, ரூ. 3283க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *