
மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ,இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
அது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இது விவரிக்கவே முடியாத தருணம். இறுதியாக நிகழ்ந்தேவிட்டது, இளையராஜா இசையில் மாரிசெல்வராஜ் இயக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாரி செல்வராஜ் ஒரு வீடியோ இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தில் ‘இளையராஜாக்கள் கபாடி கழகம்’ என்ற காட்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, தனியார் யூடியூப் சேனலில் மாரி செல்வராஜிடம் இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள்? என்ற கேட்கப்பட்ட பின்னணி குரல் இடம்பெறுகிறது. அப்போது ”இளையராஜா ஒரு இமயம், அவரை சந்திப்பது ஒரு தெய்வீகமான அனுபவம். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் உள்ளது. ஒட்டுமொத்த இசையாக இருக்கக் கூடிய இளையராஜாவிடம் பணியாற்றக் கூடிய அளவில் எனக்கு பக்குவம் வேண்டும்” என மாரி செல்வராஜ் கூறுகிறார்.
இதனிடையே மாரிசெல்வராஜ் இளையராஜாவை சந்திக்கும் வீடியோவும், ’மஞ்சணத்தி’ படத்திற்காக இளையராஜா இசையமைப்பது போன்ற காட்சியும்,. இறுதியாக வெள்ளைத் தாளில் ‘மஞ்சணத்தி’ இளையராஜா – மாரி செல்வராஜ் என்று எழுதுவதும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



