பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: விஜய் நாளை டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தலைவருமான சி.ஜோசப் விஜய், முதலமைச்சராக மே 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அரசு முறை பயணமாக கடந்த மே 27-ம் தேதி அவர் டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கைகளை அடக்கிய மனுவை வழங்கினார். அத்துடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அவரிடமும் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பான மனுவை வழங்கினார்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூன் 10) டெல்லி செல்கிறார்.சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நாளை காலை 8 மணியளவில் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றடையும் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை மறுநாள் (ஜூன் 11) டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்திற்கிடையே பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விஜய் நேரில் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்துப் பேசுகிறார். மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 12- ம் தேதி மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்புகிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *