
ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 56 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீ ராகுல் காந்தி ஜிக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்திக்கு வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார். அதில், “எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.



