யாராக இருந்தாலும் தப்ப முடியாது: பிரதமர் மோடி மிரட்டல்

இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என பல்வேறு நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியைத் தொடர்ந்து இப்போராட்டம் தமிழ்நாட்டிலும் வெடித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், வாலிபர் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் நீட் தேர்வுக்கு எதிராக மறியல், முற்றுகை, வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். அவர்களை தவெக அரசு கைது செய்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *