தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம்: அபிஜீத் திப்கே திட்டவட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜெபி) சார்பில் போராட்டம் கடந்த 35 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டுள்ளார். அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டாலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடரும்” என்று அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அபிஜீத் திப்கே அவரது எக்ஸ் பக்கத்தில், “சோனம் சார் தன் 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த நிம்மதியை தருகிறது. சோனம் வாங்சுக்கின் அசாதாரணமான துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் எங்களது நன்றி. சோனம் வாங்சுக் தமது சொந்த வாழ்வைப் பணயம் வைத்து இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார். இந்த தேசத்துக்கு சோனம் வாங்சுக் உயிர் விலைமதிப்பற்றது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை ஜந்தர் மந்தரில் எங்களது போராட்டம் நீடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *