
‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு குடியர்சு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு சட்டம் இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்து வருகிறது. அதன்படி தேசிய கீதம் பாடப்படுவதை உள்நோக்கத்துடன் தடுக்க முற்பட்டாலோ அல்லது அவமதித்தாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டைனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டைனகள் வழங்கப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசு ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், இப்பாடல் அவமதிக்கப்பட்டால் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையிலும் தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு சட்ட திருத்த மசோதா, 2026-ஐ கொண்டுவந்தது. இந்த மசோதா கடந்த கடந்த ஜூலை 29-ம் தேதி மக்களவையிலும், 30-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு சட்ட திருத்த மசோதா, 2026-க்கு குடியர்சு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘வந்தேமாதரம்’ பாடலுக்கு அவமதிப்பு ஏற்படுத்தினால் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதல் முறையாக பாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



